பக்கம் எண் :

சீறாப்புராணம்

922


இரண்டாம் பாகம்
 

முகம்மதுர்ற சூலுல்லாஹிழு என்னும் திருக் கலிமாவை மனதின் கண் செவ்வைப் படுத்தா நிற்கும் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினர் யாவரும் அவ்வாறு திரு மதீனமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2499. மக்க மாநகர்த் தீனவ ரியாவரு மதீனம்

     புக்கி னாரெனு மொழிபல பலபுறம் பொசிய

     வுக்கு பாவுத் பாவுமை யாவொலி துரைப்பத்

     தக்க பேருடன் கேட்டபூ சகுலுட றளர்ந்தான்.

34

      (இ-ள்) திரு மக்கமா நகரத்தின் கண்ணுள்ள தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினர்க ளியாவரும் அவ்வாறு திரு மதீனமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்தார்க ளென்று சொல்லும் வார்த்தை யானது பற்பல பக்கங்களிலும் வெளிப்படும் வண்ணம் உக்குபா, உத்துபா, உமையா, ஒலீ தாகிய இவர்கள் கூற, அபூஜகி லென்பவன் தகுதியை யுடைய மற்றவர்களோடு காதுகளினாற் கேள்வி யுற்றுத் தனது சரீர மானது தளர்ச்சி யடையப் பெற்றான்.

 

2500. வடித்து மும்மறை தெளிந்தமன் னவரையும் வடிவா

     ளெடுத்த வீரத்தின் றிறத்தவ ரினத்தையு மிசுலாந்

     தடுத்து நின்றவர் குலத்தையுந் தனக்குயிர்த் துணையா

     யடுத்த பேரையும் விரைவினிற் றனித்தனி யழைத்தான்.

35

      (இ-ள்) அவ்வாறு தளர்ச்சி யடைந்த அந்த அபூஜகி லென்பவன் முன்னுள்ள தௌறாத்து, இஞ்சீல், சபூ றென்னு மூன்று வேதங்களையுந் தெளிந்துத் தேறிய அரசர்களையும் கூரிய வாளாயு தத்தைக் கைகளிலெடுக்கப் பெற்ற வல்லமையினது திறத்தை யுடையவர்களின் கூட்டத்தையும் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தை ஓங்க விடாது விலக்கி நின்றவர்களின் கூட்டத்தையும் தனது பிராணனுக்குத் துணையாக நெருங்கிய ஜனங்களையும் ஒருவ ரொருவராகச் சீக்கிரத்தில் கூப்பிட்டான்.

 

2501. குறைசி யங்குலக் காபிர்க ளனைவருங் கூண்டு

     நிறைத ரும்பெருங் குழுவினிற் புகமன நேடிச்

     சிறியன் வஞ்சகச் செய்கைய னியாவர்க்குந் தீயோ

     னிறைவ னேவலைத் தவிர்த்திடுங் கசட்டிபு லீசு.

36

      (இ-ள்) அவ்விதங் கூப்பிட வந்து அழகிய குறைஷிக் குலத்தினது காபிர்களியாவருந் திரண்டு நிறைந்த பெரிய அந்தக் கூட்டத்திற் செல்ல மன விருப்ப முற்று கீழ்மை யாகிய கபடச் செய்கைகளை யுடையவனும் எல்லார்க்குந் தீமையை யுடையவனும் இறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் ஏவலை விட்டக் குற்றத்தை யுடையவனுமான இபுலீ சென்பவன்.