பக்கம் எண் :

சீறாப்புராணம்

93


முதற்பாகம்
 

202. மக்க நன்னக ரப்துல்முத் தலிபெனு மன்ன

    ரக்க மன்னமன் னப்துல்லா தனையழைத் திருத்தித்

    தக்க புத்தியு முறைமையுந் தொழிலையுஞ் சாற்றி

    யொக்கல் கூட்டுறப் புறநகர்க் கெழுகவென் றுரைத்தார்.

37

     (இ-ள்) மக்கமாகிய நன்மைபொருந்திய நகரத்திற்கு மன்னவரென்று சொல்லா நிற்கும் அப்துல் முத்தலிபானவர் தமது கண்களைப் போன்ற அரசரான குமாரர் அப்துல்லாவையழைத்து அருகிலுட்காரச் செய்து வர்த்தகத்தையும் அது செய்யத்தக்க வொழுங்குகளையும் அதற்காக நடக்க வேண்டும் புத்திமதிகளையும் அவருக்குச் சொல்லிக் காட்டி உறவினர்கள் சேர்மானமாகப் பிரதேசங்கட்கு வர்த்தக நிமித்தம் புறப்புடுவாயாக என்று சொன்னார்கள்.

 

203. தந்தை கூறிட அப்துல்லா மனந்தறு காமன்

    மந்திர வாளெடுத் தினிதுற விசித்தனர் மருங்கி

    லிந்திர வில்லென வில்லெடுத் தொருகையி லேந்திக்

    கந்து கங்கொணர் கென்றுகட் டுரைத்தனர் கடிதின்.

38

     (இ-ள்) தமது தந்தையாகிய அப்துல் முத்தலிபானவர் அவ்வாறு சொல்ல, குமாரராகிய அப்துல்லா அவர்கள் தந்தையின் மனவெண்ணம் தவறாதபடி இனிமைபொருந்த அந்தரங்க வாளையெடுத்துத் தமதிடுப்பின்கண் கட்டிப் பின்னர் வானவிற் போன்ற வில்லையெடுத்து ஒரு கையில் தாங்கிக் கொண்டு குதிரையை விரைவில் கொண்டு வருவாயாக வென்று உறுதியாகத் தமது பாகனுக்கு ஆக்கியாபித்தார்கள்.

 

204. பாட லத்தின்மேற் கொண்டுறு தனிற்பரி வாரங்

    கூடு கோளரித் திரளென வரநெறி குறுகிக்

    காடுங் கானமுங் கடந்துசெந் தேம்பொழிற் கனிசூழ்

    நாட டைந்துபோய்ப் புகுந்தனர் மதீனமா நகரில்.

39

     (இ-ள்) அவ்வாறு ஆக்கியாபித்தபோது பாகனாற் கொண்டுவரப்பட்ட குதிரையின் மேலேறித் தமதிடத்திற் பொருந்திய சூழ்வோர் பலரும் திரண்ட ஆண்சிங்கத்தினது கூட்டத்தைப் போல நெருங்கிவர மதீனத்தினது பாதையை அடுத்து அடர்ந்த கானகங்களையும், கானங்களையும் தொலைத்துச் செழிய தேனையுற்ற கனிகளையுடைய நாட்டினைச் சேர்ந்து மதீனாவென்னும் பெரிய பட்டணத்தின்கண் போய்ப் புகுந்தார்கள்.

 

205. மதினத் தின்னுறை ரசவருக் கங்களு மதினப்

    பதிய டுத்தவூர்ச் சரக்கையுங் கொண்டுபந் தனமாக்

    கதிர்கொண் மாடத்திற் கட்டிவைத் தவரவர் கரத்திற்

    புதிய வாணிபத் தலைவிலைக் கீந்தனர் பொருளை.

40