இரண்டாம் பாகம்
நடந்து சென்று அவனைக் காண்பார்கள்.
அவ்விதங் காண்பதும் அருமையான காரியமென்று தனது சிந்தையின் கண் சிந்தித்து அழியாத கீர்த்தி
பொருந்திய அழகிய வெற்றியை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களைத் தேடிச் சென்ற மற்ற காபிர்களைப் போலத் தானும் போகா நிற்கும் தனது
திக்கிற் போய்ச் சேர்ந்தான்.
2566. ஆலயத் திடத்துந் தீனோ ரணிமனை
யிடத்துஞ் சேர்ந்த
சோலையி னிடத்துஞ் சீறூர்
சுற்றினுந் துறுகற் சார்புங்
கோலமுள் ளீந்திரன் கானுங்
குரிசினந் நபியை மேலுங்
காலிட விடமின் றென்னக்
காபிர்க டேடி னாரால்.
101
(இ-ள்) காபிர்களாகிய
அந்தத் திரு மக்கமா நகரத்தினது சத்துராதிகள் கோயில்களி னிடத்திலும் தீனுல் இஸ்லா மென்னும்
மெய் மார்க்கத்தார்களின் அலங்காரத்தை யுடைய வீட்டுகளினிடத்திலும் பொருந்திய பூங்காவுகளி
னிடத்திலும் சிற்றூர்களினிடத்திலும் அவற்றைச் சுற்றி வளைந்த அவற்றிற் கினமான மற்ற ஊர்களினிடத்திலும்
நெருங்கிய கற்களினது சார்பிலும் அழகிய முட்களைக் கொண்ட ஈத்த மரங்களை யுடைய காட்டுகளினிடத்திலும்
மேலும் பாதத்தை வைப்பதற் கிடமில்லை யென்று சொல்லும் வண்ணம் குரிசி லாகிய நமது நாயகம் நபி
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் தேடினார்கள்.
2567.
கிரிப்பொதும் பிருந்து
மாறாக் கிளரொளி வனப்பின் மிக்கார்
மருப்புய னப்துல் லாவைக் கூவிமா
நகரம் புக்கி
யிருப்பவ ரெவர்க்குந் தோன்றா
தேதிலார் நடத்துஞ் செய்கை
விருப்புறத் தெரிந்து வல்லே
விரைந்திவண் வருக வென்றார்.
102
(இ-ள்) நீங்காது ஓங்கா
நிற்கும் பிரகாசத்தினது அழகில் மிகுந்தவர்களான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களும் அம்
மலையினது பொதும்பரில் இருந்து கொண்டு வாசனையைக் கொண்ட தோள்களை யுடையவரான அப்துல்லா வென்னும்
வாலிபரை யழைத்து நீவிர் பெருமையை யுடைய திரு மக்கமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்து அங்கு
தங்கியிருக்கும் யாவருக்குந் தெரியாது அந்தச் சத்துராதிக ளான காபிர்கள் விருப்ப முற நடத்துகின்ற
கருமத்தை யறிந்து மிகவும் விரைவில் இவ் விடத்திற்கு வருவீராக வென்று ஆக்கியாபித்தார்கள்.
|