இரண்டாம் பாகம்
மார்க்கத்தைப் பொருந்திய
புறுக்கானுல் அலீ மென்னும் வேத வசனத்தில் தவறாத வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்விதம் அந்தத் தௌறு மலையின்
கண் தங்கியிருக்கப் பார்த்த அங்குள்ள சிலந்திப் பூச்சிகள் அன்புடன் அவர்கள் தங்கியிருந்த
அம் மலையினது பொதும்பின் கண் தணியாக் கோபத்தைச் செய்து பகைத்த அந்தச் சத்துராதிகளாகிய
காபிர்கள் பாராத விதத்தில் பலன் பெறும் வண்ணம் தங்களின் மெய்யினிடத்துள்ள நூலால்
வாயினால் செறியும்படி மூடின.
2571.
முகம்மது விருக்குஞ்
சார்பிற் சிலம்பிநூன் மறைப்ப வோர்பாற்
புகைநிறக் குன்றிச் செங்கட்
புறவினங் குடம்பை செய்திட்
டகடுறைக் கருவிட் டன்பா யணிமணிச்
சிறையாற் போர்த்துப்
புகரறச் சேவ லோடும்
பொருந்தியங் கிருந்த தன்றே.
106
(இ-ள்) அன்றியும் நாயகம்
நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்கியிருந்த
அந்த மலைச் சார்பினில் சிலந்திப் பூச்சிகள் அவ்வாறு நூலினால் மூட, ஓர் பக்கத்தில் தூபத்தினது
நிறத்தையும் குன்றி மணியை யொத்த சிவந்த கண்களையு முடைய புறாவினது கூட்டங்கள் கூடு கட்டித் தங்களின்
வயிற்றினிடத்துத் தங்கிய கருவாகிய முட்டைகளையிட்டு அன்போடும் அழகிய மணிச் சிறகுகளினால்
அம் முட்டையை மூடிக் குற்ற மறத் தங்களின் ஆண் புறாக்களோடும் பொருத்த முற்று அவ் விடத்தில்
அடைகாத்துத் தங்கியிருந்தன.
2572.
பொருந்துதல் பயிலாக்
காபிர் திசைதொறும் புகுந்து தேடிக்
கருந்தடங் கொண்டற் செவ்விக்
கவிகையி னுலகங் காத்து
விரிந்ததீன் விளக்கஞ் செய்யும்
வேதிய ரிறசூ லுல்லா
விருந்தவா னுரைஞ்சி நின்ற
விறும்பிடத் தடைந்தா ரன்றே.
107
(இ-ள்) அவைக ளவ்வா
றிருக்க, இயைதற் றொழிலிற் பழகாத காபிர்களாகிய அச்சத்துராதிகள் திசைக ளெல்லாவற்றிலும்
சென்று விசாரித்துப் பெருமை பொருந்திய கரிய மேகத்தினது அழகிய குடையினால் இவ்வுலகத்தைக் காவல்
செய்து பரந்த தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தை விளக்கஞ் செய்யா நிற்கும் வேதிய
ரான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் றசூல் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் தங்கியிருந்த ஆகாயத்தைத் தடவி நின்று அந்தத் தௌறு மலையின் கண் வந்து சேர்ந்தார்கள்.
|