பக்கம் எண் :

சீறாப்புராணம்

957


இரண்டாம் பாகம்
 

பார்த்தால் சீக்கிரத்தில் காணுவார்க ளென்று வேதிய ரான அந்நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

 

2576. இருவர்நா மிருப்பப் பூவி னிருந்தபல் லுயிருங் காக்கு

     மொருவனம் மிடத்தை நீங்கா துடனுறைந் திருப்பக் காபிர்

     தெரிதருங் கண்ணிற் காணச் செயலுமற் றுண்டோ வென்றா

     ரருவரை முழையிற் புக்கி யருக்கனொத் திருக்கும் வள்ளல்.

111

      (இ-ள்) அருமையான அந்தத் தௌறு மலையினது குகையிற் போய்ச் சேர்ந்து சூரியனை நிகர்த்திருக்கும் வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு எடுத்துக் கூறக் கேள்வியுற்று நாமிருவரும் இவ்விடத்திற் றங்கி யிருக்க இவ்வுலகின் கண்ணுறைந்த பல ஜீவ ராசிகளையும் காக்கா நிற்கும் ஒப்பற்றவனாகிய ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் நம்மிடத்தை விட்டு மகலாது நம்முடன் தங்கியிருக்கக் காபிர்களாகிய அந்தச் சத்துராதிகளின் தெரிகின்ற கண்களில் நாம் தோற்றுவதற்கு யாதேனுமோர் கருமமு முளதோ? இல்லை என்று சொன்னார்கள்.

 

2577. ஒருங்கினி னின்ற காபி ரொருவருக் கொருவ ரிந்த

     மருங்கினிற் பொதும்பிற் புக்கி நோக்குவம் வருக வென்றார்

     நெருங்கிய சிலம்பி நூலும் நீள்சிறைப் புறவின் கூடுஞ்

     சுருங்கிடா தழியா தியாவர் தொடருவர் பொதும்பி னென்றார்.

112

      (இ-ள்) அவர்கள் அவ்விதஞ் சொல்ல, ஒன்றாய்க் கூடி நின்ற காபிர்களாகிய அந்தச் சத்துராதிகள் தங்களி லொருவருக் கொருவர் இந்தப் பக்கத்திலிப் பொதும்பிற் போய் நுழைந்து அந்த முகம்ம தென்பவனைப் பார்ப்போம், வாருங்க ளென்றார்கள். அதற்கு மற்றையோர் நெருக்கமுற்ற சிலந்திப் பூச்சியினது நூலும் நீண்ட சிறகுகளையுடைய புறாக்களின் கூடும் சுருங்காமலும் அழியாமலும் இப்பொதும்பிற் றொடர்ந்து செல்லுவார் யாவர்? ஒருவரு மில்ல ரென்று சொன்னார்கள்.

 

2578. இப்படிச் சிலர்கூ றக்கேட் டெவருமெம் மருங்கு நோக்கி

     மைப்படி கவிகை வள்ளன் முகம்மதைக் காண்கி லோமென்

     றொப்புர வகன்ற நெஞ்சோ டுளைந்துலைந் தடவி சுற்றி

     மெய்ப்பொடும் வெயர்வை சிந்த விலங்கல்விட் டகன்று போனார்.

113