இரண்டாம் பாகம்
விடமீட்ட படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
2580.
நகரைவிட் டகன்று கான்சூழ்
நகத்திடத் துறைந்து தேடு
மிகலவர் கண்ணிற் காணா திருந்தவ
ணிருக்குங் காலைப்
புகலபூ பக்கர் செவ்விய மடிமிசைப்
பொருந்த வாசந்
திகழ்சிரஞ் சேர்த்தி
வள்ளல் செழுந்துயில்புரிவ தானார்.
1
(இ-ள்) தங்களின் நகரமாகிய
திரு மக்காப் பதியை விடுத்து நீங்கிக் காடானது சூழப் பெற்ற அந்தத் தௌறு மலையின் கண் தங்கித்
தங்களை விசாரியா நிற்குஞ் சத்துராதிகளாகிய காபிர்களின் கண்களிற் றெரியாமல் அவ்விடத்தில்
இருக்குஞ் சமயத்தில், வெற்றியை யுடைய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களின் அழகிய
மடியின் மீது வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா
ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தங்களின் பரிமளத்தைக் கொண்ட
ஒள்ளிய தலையைப் பொருந்தும் வண்ணம் பொருத்திச் செழிய நித்திரை செய்யலானார்கள்.
2581.
விடுங்கதிர்க் கனற்கண் வேங்கை
மெய்யணைச் சிரத்தைச் சேர்த்த
மடங்கலே றென்னச் செவ்வி
முகம்மது துயிலும் போதி
லிடங்கொளந் தரமு மண்ணு மிடனற
நெருங்கி விண்ணோர்
நெடுங்கழை வரையைச்
சுற்றிக் காவலி னிறைந்து நின்றார்.
2
(இ-ள்) அழகிய நமது நாயகம்
நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பிரகாசத்தை விடா நிற்கும் அக்கினியைப்
போன்ற கண்களை யுடைய புலியினது சரீரமாகிய மெத்தையில் தலையைப் பொருத்திய ஆண் சிங்கத்தைப்
போன்று நித்திரை செய்யுங் காலத்தில் விசாலித்த வானமும் பூமியும் இடமில்லாது தேவர்களாகிய
மலாயிக்கத்து மார்கள் நெருக்க முற்று நெடிய மூங்கில்களை யுடைய அந்தத் தௌறு மலையைச் சூழ்ந்து
காவலில் நிரம்பி நின்றார்கள்.
2582.
மறைநபி துயிலா நின்ற
மலைமுழை யதனின் கண்ணே
குறுவளை யனேக மாங்கோர்
வளையினிற் கொடுங்கண் வெவ்வாய்த்
தெறுநுனைப் புரைப்பற் புண்ணாச்
சிறுபொறிப் படத்த செஞ்சூட்
டெறுழ்வலிக் கரிய பாந்த
ளிருந்தலை நீட்டிற் றன்றே.
3
|