இரண்டாம் பாகம்
(இ-ள்) புறுக்கானுல் அலீ
மென்னும் வேதத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு நித்திரை செய்கின்ற மலையினது குகையினிடத்துச் சிறிய துவாரங்கள்
அனேகமுள்ளன. அதிலொரு துவாரத்தில் கொடிய கண்களையும் வெவ்விய வாயையும் முனை தங்கிய துவாரத்தினது
பற்களையும் புண்ணைக் கொண்ட நாவையும் சிறிய புள்ளிகளைப் பெற்ற உச்சிக் கொண்டையையும் மிகுத்த
வலிமையையு முடைய ஒரு கருநிறத்தின் சர்ப்ப மானது தனது பெரிய சிரத்தை நீட்டிற்று.
2583.
பொரியரைத் தருக்க
ளியாவும் புதுமலர் சொரியுங் கானின்
கிரியிடைப் பொதும்பர்
வாயிற் கேசரி யனைய வள்ளல்
வரிதருங் கமலச் செங்கண்
வளரிடத் தரவு தோன்றக்
கரிமருப் புதிர்க்கும்
வெள்வேற் கரத்தபூ பக்கர் கண்டார்.
4
(இ-ள்) பொரியினது
அரையினை யுடைய விருட்சங்களியாவும் புதிய புஷ்பங்ளைச் சிந்தா நிற்கும் காட்டில் அந்தத் தௌறு
மலையினிடத்து குகையின் கண் சிங்கத்தை நிகர்த்த வள்ளலாகிய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இரேகைகளை யுடைய தாமரை மலரை நிகர்த்த சிவந்த கண்களை
மூடி நித்திரை செய்யுஞ் சமயத்தில் அவ்வாறு சர்ப்பமானது தோற்றமாக யானைகளின் கொம்புகளைச்
சிந்தச் செய்யும் வெள்ளிய வேலாயுதத்தினது கையை யுடைய அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு
அவர்கள் பார்த்தார்கள்.
2584.
படியடி பரப்பச் செய்யா முகம்மதும்
பரிவு கூர
மடிமிசை துயின்றா ரிந்த
வளையிடத் தரவுங் கண்டேம்
விடிவதெவ் வாறோ வென்ன
வெருவிநெஞ் சுளைந்து போர்த்த
பிடவையிற் கிழித்துச்
சுற்றிப் பேதுறா தடைத்து நின்றார்.
5
(இ-ள்) அவ்வாறு பார்த்துப்
பூமியின் மீது தங்கள் பாதத்தைப் பரவும் வண்ணம் செய்யாத நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அன்பு கூறும் படி நமது மடியின் மீது சயனித்தார்கள்.
நாம் இந்தத் துவாரத்தின் கண் சர்ப்பத்தையும் பார்த்தோம். ஆதலால் இனி யுண்டாவ தெவ்விதமோ?
அறியோ மென்று சொல்லிப் பயந்து மனமானது நைதலுறப் பெற்றுத் தாங்கள் மூடியிருந்த வஸ்திரத்தில்
ஓர் பகுதியைக் கீறிச் சுற்றி அஞ்சாது அத் துவாரத்தை யடைத்து நின்றார்கள்.
|