இரண்டாம் பாகம்
வருமே யானால் இத் துவாரத்தை
மறைத்தடைப்பதற்கு நம்மிடத்தில் ஒன்றுமில்லை. தெய்வீகந் தங்கிய வள்ளலாகிய நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது தூக்கத்தை மறுப்பதும்
நல்லதல்ல வென்று சரீரமானது திடுக்கிடப் பெற்ற ஏக்க முற்றுத் துன்பத்தைத் தாங்கி நின்றார்கள்.
2588.
இருமனம் பேதுற் றங்ங னிருப்பவப்
புழையின் கண்ணே
விரிதரு கவைநா நீட்டிக் கட்செவி
விரைவிற் றோன்றப்
பெரியவன் றூதர் தம்பால்
வருமுனம் பெட்பி னோடு
மொருதிருத் தாளை நீட்டிக்
காப்பதற் கொருமித் தாரால்.
9
(இ-ள்) அவ்வாறு தாங்கி
நின்ற அவ் வபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்கள் தங்களின் பெருமை பொருந்திய இதயமானது
மயக்க முறப் பெற்று அக் குகையில் கண்ணிருக்கவும், அடைக்க எஞ்சிய அத்துவாரத்தினிடத்து அச்சர்ப்பமானது
விரைவாக விரிந்த பிளப்பை யுடைய தனது நாவை நீட்டிக் கொண்டு தோற்றமாகவும், பெரியவனான அல்லாகு
சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களின் பக்கத்தில் அச்சர்ப்பம் வந்து சேர்வதற்கு முன்னர் அன்புடன் தங்களின்
ஒப்பற்ற தெய்வீகந் தங்கிய ஒரு காலை நீட்டி அத் துவாரத்தை அடைத்து அஃது வெளியில் வராமற்
காப்பதற்குத் தங்களின் மனத்தி னிடத் தொருமைப்பட்டார்கள்.
2589.
மடிமிசை யிருந்த காந்தி மதிமுக
மசைந்தி டாமற்
கடிநறைப் பொதுளுஞ் செவ்விக்
கமலமென் வலத்தா ணீட்டி
விடவர வுறையும் பாலில்
வெளியணு வெனினுந் தோன்றா
திடனற வுள்ளங் கால்கொண்
டின்புற வடைத்தா ரன்றே.
10
(இ-ள்) அவ்வித மொருமித்த
அவர்கள் தங்களின் மடியின் மீது வைகிய பிரகாசத்தை யுடைய சந்திரனைப் போன்ற நாயகம் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வதனமான தசையப் பெறாமல் மிகுந்த வாசனை
யானது நெருங்கா நிற்கும் அழகிய தாமரை மலரை யொத்த மெல்லிய வலது காலை நீட்டி விடத்தைக்
கொண்ட அந்தச் சர்ப்பம் தங்கிய அத் துவாரத்தி னிடத்து வெளியானது அணுப்போலும் தெரியாமல்
உள்ளங் கால் கொண்டு இடமில்லாது இனிமையுடன் அடைத்தார்கள்.
|