பக்கம் எண் :

சீறாப்புராணம்

963


இரண்டாம் பாகம்
 

2590. புறப்படற் கரிதாய் வேகம் பொங்கிக்கண் சிவந்து சீறி

     மறைப்படும் வளைக்கு ளார்ந்த வல்லுட னெளித்து நீட்டிக்

     குறிப்பொடு கெந்த நான்குங் குழைவற நிமிர்த்து வாய்விண்

     டுறப்பட வுள்ளந் தாளிற் கவ்விய துரக மன்றே.

11

      (இ-ள்) அவர்கள் அவ்வா றடைக்க, அந்தச் சர்ப்ப மானது தனக்கு வெளிப்படுதற் கருமை யாகிக் கோபமானது அதிகரிக்கப் பெற்று இரு கண்களுஞ் செந்நிற மடைதலுற்று இரைந்து மறைவுபட்ட அத் துவாரத்தினகம் பொருந்திய தனது வலிமையை யுடைய சரீரத்தை நெளித்து நீளச் செய்து இலக்குடன் நான்கு கெந்தங்களையும் குழைவில்லாது நிமிர்த்தி வாயைத் திறந்து மிகவும் பொருந்தும் வண்ணம் அவ் வுள்ளங்காலில் கடித்தது.

 

2591. கடிவழி யுதிரஞ் சிந்தக் காறளர்ந் தசைந்தி டாம

     னெடியவன் றூதர் செய்யு நித்திரைக் கிடரில் லாமற்

     புடையினி லிருந்த சர்ப்பம் புறப்படற் கிடங்கொ டாம

     லுடலணு நடுக்க மின்றி யிருந்தன ருணர்வின் மிக்கார்.

12

      (இ-ள்) அவ்விதங் கடிக்க, அறிவினால் மிகுத்தவ ரான அவ் வபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்கள் அந்தச் சர்ப்பம் கடித்த இடத்திலிருந்து இரத்தஞ் சொரிய அதனால் தங்களின் காலானது தளர்ச்சியுற்று அசையாமலும் நெடியவ னான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் செய்யுகின்ற தூக்கத்திற்கு இடரில்லாமலும் அத் துவாரத்தின் கண் தங்கிய சர்ப்பத்திற்கு வெளியில் வருவதற் கிடங் கொடாமலும் தங்களின் சரீரமானது அணுப் போலவும் பதறுத லுறாமலு மிருந்தார்கள்.

 

2592. மிதிப்படும் வளையிற் காலை விடுத்திலர் கடித்து மென்னக்

     கொதிப்பொடு கெந்த நான்குங் குறைபடச் சீறிச் சீறிப்

     பதிப்பொடு முடலை வீங்கிப் படுவிட மனைத்துஞ் சிந்தி

     யதிர்ப்பொடும் வேக மீக்கொண் டடிக்கடி கடித்த தன்றே.

13

      (இ-ள்) அவ்வாறு கடித்து மென்ன? ஒன்று மில்லை. அவ்வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் அத் துவாரத்தில் மிதித்த காலை விட்டிலர். அச் சர்ப்ப மானது கொதித்த லுடன் தனது நான்கு கெந்தங்களும் குறைவுபடும் வண்ணம் இரைந்திரைந்து பதிப்புடன் தனது சரீரத்தை வீங்கச் செய்து தன்னிலுண்டாகப் பெற்ற விட மெல்லாவற்றையும் பொழிந்து அதிர்த்த லோடும் அதிகக் கோபங் கொண்டு அடிக்கடி மறுத்துங் கடித்தது.