பக்கம் எண் :

சீறாப்புராணம்

964


இரண்டாம் பாகம்
 

2593. மாசறத் தெளித்த பஞ்சின் வாய்ப்படு நெருப்புப் போன்றும்

     வேசறச் சுட்ட சாம்பர் மீதுறும் புனலைப் போன்று

     மூசிவெள் ளெயிறு சிந்த முரணராக் கடித்த வாயி

     னாசொடும் விடத்தின் வேக மாகத்தின் முழுது மேற்ற.

14

      (இ-ள்) குற்ற மறச் சுத்தப் படுத்திய நூற் பஞ்சி னிடத்துப்பட்ட அக்கினியை நிகர்த்தும் வேசறச் சுட்ட சாம்பலின் மிசை பொருந்திய நீரை நிகர்த்தும் மாறுபாட்டை யுடைய அந்தச் சர்ப்பமானது சீறுதலுற்று வெள்ளிய பற்கள் சிதறும் வண்ணம் அவ்வாறு கடித்த அந்த இடத்தினது குற்றத்தோடு கடுமையானது சரீர முழுவதிலும் பொருந்திற்று.

 

2594. பன்னருங் கொடிய வேகம் பரந்துட லனைத்தும் தாக்கிச்

     சென்னியிற் பரப்பச் சற்றே சிந்தையின் மயக்கந் தோன்றத்

     தன்னிலை தளரா துள்ளந் தாளையும் பெயர்த்தி டாம

     லந்நிலை யிருந்தார் செவ்வி யகுமதும் விழித்தா ரன்றே.

15

      (இ-ள்) சொல்லுதற் கருமையான கொடுமையை யுடைய அவ்வேக மானது அவ்வாறு சரீர முழுவதும் பரந்து பாய்ந்து தலையிற் பரவவே அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் தங்களின் மனதின் கண் கொஞ்ச மயக்க முண்டாகத் தங்கள் நிலைமையில் நின்றுந் தளர்வடையாது உள்ளங் காலையும் பெயர்க்காது முன்னிருந்த அந்த நிலைமைப்படியே யிருந்தார்கள். அழகிய அஹ்மதென்னுந் திருநாமத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் தங்களின் நித்திரையை விட்டும் விழித்தார்கள்.

 

2595. மதியிடத் திரண்டு செவ்வி மரைமலர் பூத்த தென்ன

     விதியவன் றூதர் கண்கள் விழித்தபூ பக்கர் தம்மை

     யெதிரினி னோக்கச் சற்றே மயக்கமுற் றிருந்தார் கண்டு

     புதியகா ரணங்க ளேது முளதெனிற் புகலு மென்றார்.

16

      (இ-ள்) ஓர் சந்திரனிடத்து அழகிய இரண்டு தாமரை மலர்கள் மலர்ந்தவற்றைப் போலச் சகல ஜீவ ராசிகளின் நியமிப்பையுமுடையவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார்  நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு தங்களின் நேத்திரங்களைத் திறந்து தங்களி னெதிரிலிருந்த அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களைப் பார்க்க, அவர்கள் கொஞ்சம் மயக்க மடைந்திருந்தார்கள். அதைப் பார்த்து நீவிர் நூதன மாகிய காரணங்களியாதேனு முள்ளதேல் அதை எனக்குச் சொல்லு மென்று கேட்டார்கள்.