பக்கம் எண் :

சீறாப்புராணம்

965


இரண்டாம் பாகம்
 

2596. தடவரைப் பொதும்பி னீவிர் தண்மதி கடுப்பச் சாய்ந்தென்

     மடிமிசை துயில வாதி வல்லவ னுரையா லிந்த

     நெடுமுழை யதனி னேரா நெட்டுடல் வளைக்கும் பாந்தள்

     கடிதினிற் றலையை நீட்டக் கண்டனன் கவலை கூர.

17

      (இ-ள்) அவர்கள் அவ்விதங் கேட்க, அந்த அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் நீங்கள் பெரிய இந்தத் தௌறு மலையினது குகையினிடத்து குளிர்ச்சி தங்கிய சந்திரனைப் போலும் எனது மடியின் மீது சரிந்து நித்திரை செய்ய, யாவற்றிற்கும் முதன்மை யாகிய வல்லவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் உத்தரவினால் இந்த நெடிய துவாரத்திற்கு நேராக நீட்சி யுற்ற தனது சரீரத்தை வளைக்கா நிற்கும் ஒரு சர்ப்ப மானது விரைவில் தனது சிரத்தை நீட்ட, யான் விசாரமான ததிகரிக்கும் வண்ணம் எனது கண்களினாற் பார்த்தேன்.

 

2597. அப்பெரும் பாந்த ளிங்ஙன் வருமுன மடைப்பான் வேண்டி

     யொப்பரு மதியின் காந்தி யுரித்தெனத் துகிலை யென்றன்

     கைப்படக் கீண்டுள் ளோடிக் கரந்திட வடைத்தே னப்பாற்

     றுப்பொடும் வேறு வேறு புழைதொறுந் தோன்றிற் றன்றே.

18

     (இ-ள்) அந்தப் பெரிய சர்ப்ப மானது இவ்விடத்திற்கு வருவதற்கு முன்னர் அத் துவாரத்தை அடைப்பதற்காக ஒப்புச் சொல்லுவதற் கருமையான சந்திரனது பிரகாசத்தை யுரிந்ததைப் போலும் எனது வத்திரத்தை யுரிந்து கையினால் பொருந்தும் வண்ணங் கிழிந்து உள்ளே அது திரும்பி யோடி மறையும்படி அத் துவாரத்தை அடைத்தேன். அதன் பின்னர் அச்சர்ப்ப மானது அனுபவத்துடன் வெவ்வேறான துவாரங்க ளெல்லாவற்றிலும் தோற்றமாகி வந்தது.

 

2598. இனையன புழைக ளெல்லா மரவெழுந் தெதிரத் துன்ப

     மனதினிற் படரச் சோதிக் கலையினை வலிதின் வாங்கி

     நனிபெறக் கீண்டு கீண்டு நலந்தர வடைத்து நின்றேன்

     குனிசிலைத் தழும்பின் கையாய் கொடும்புரை யொன்றல் லாமல்.

19

      (இ-ள்) வளைக்கா நிற்குங் கோதண்டத்தைத் தாங்கிய மறுவினைக் கொண்ட கையை யுடைய நபிகட் பெருமானே! இந்தப்படி துவாரங்களெல்லாவற்றிலும் அந்தச் சர்ப்பமானது எழும்பி எனக்கு முன்னாக, மனதின் கண் வருத்தமானது பரவும் வண்ணம் பிரகாசத்தை யுடைய அவ்வத்திரத்தை வலிமையுடன் வாங்கி அதிகமாகக் கிழித்துக் கிழித்து நலந்தரும்படி கொடிய அத் துவாரமானது ஒன்றல்லாமல் மற்ற துவாரங்கள் எல்லா வற்றையும் அடைத்து நின்றேன்.