பக்கம் எண் :

சீறாப்புராணம்

966


இரண்டாம் பாகம்
 

2599. முடங்கிநீண் டிருளுள் ளார்ந்த முழையொன்றிற் றலையை நீட்டத்

     தடங்கொள்கோ டிகமில் லாதாற் றாளினை நிமிர்த்துக் காலுந்

     தொடங்கிலா வண்ண நீங்கா தடைத்தனன் றுளைப்பற் பாந்தள்

     விடங்கள்கான் றரிதிற் சீறி வெகுளியிற் கடித்த தன்றே.

20

      (இ-ள்) அகத்தி லந்தகாரம் நிறைந்த ஓர் துவாரத்தில் அந்தச் சர்ப்பமானது மடங்கி நீட்சியுற்றுத் தனது சிரத்தை நீட்ட, அத்துவாரத்தை அடைப்பதற்குப் பெருமையைக் கொண்டு அவ்வத்திரமானது இல்லாததினால், பாதத்தை நிமிர்த்திக் காலுந்தொடங்காத விதத்தில் நீங்காம லடைக்கத் துவாரத்தைக் கொண்ட பற்களை யுடைய அந்தச் சர்ப்பமானது விடங்களைப் பொழிந்து அரிதி லிரைந்து கோபத்துடன் அவ்வித மடைத்த உள்ளங் காலிற் கடித்தது.

 

2600. ஊறுபட் டுதிரங் கால வலதுளந் தாளைப் பற்றி

     மாறிலா தின்னுந் தீண்டி வாங்கிய ததனா லுள்ளம்

     வேறுபட் டிமைப்பி னேர மெய்மயக் குற்றே னென்று

     மீறிலான் றூதே யிங்ஙன் விளைந்தவா றிதெனச் சொன்னார்.

21

      (இ-ள்) எக்காலமும் முடிவில்லாதவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் றசூலாகிய நபிகட் பெருமானே! அச் சர்ப்பம் அவ்வாறு காயப்பட்டு இரத்தமானது சிந்தும்படி வலது உள்ளங் காலைப் பிடித்து நீங்காது இன்னங் கடித்திழுத்தது. அக்கடிகளினால் மனமானது பிரிதலுற்றுக் கண்களை இமைக்குகின்ற அவ்வளவு நேரம் எனது சரீரம் மயக்க முறப் பெற்றேன். இவ்விடத்தில் உண்டாகிய வரலாறு இஃதென்று சொன்னார்கள்.

 

2601. அடலுறு மரியே றென்னு மபூபக்க ருரைப்பக் கேட்டுப்

     படர்பரு வரலுற் றாதி யளித்திடும் பயனு மோர்ந்து

     புடையினிற் பொருந்துந் தாளைப் பெயர்த்திடு மெனப்பு கன்றார்

     வடிவினி னிகரின் றென்ன வந்தமா முகம்ம தன்றே.

22

      (இ-ள்) வலிமை பொருந்திய ஆண் சிங்கமென்று கூறா நிற்கும் அவ்வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு சொல்ல அழகில் தங்களுக்கிணையில்லை யென்று சொல்லும் வண்ணம் தோற்றமாகிய பெருமையை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்றுப் பரவா நிற்கும் துன்பத்தைப் பொருந்தி யாவற்றிற்கு முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் கொடுக்கின்ற பயனையுஞ் சிந்தித்து அத் துவாரத்தின் கண் பொருந்திய பாதத்தை அதை விட்டும் நீவிர் பெயர்த் தெடுத்திடு மென்று சொன்னார்கள்.