பக்கம் எண் :

சீறாப்புராணம்

967


இரண்டாம் பாகம்
 

2602. தரைத்தலம் புகல வீரந் தகத்தமை நினையா நீட்டு

     மரைத்தடப் பதத்தை மெல்ல வாங்கினர் வாங்கச் சோதி

     விரித்தசூட் டெரிகட் பாந்தள் விளங்கியவ் வளையை நீங்கித்

     துருத்திநீர் வெளிவிட் டென்ன விரைவொடுந் தோன்றி நின்ற.

23

      (இ-ள்) அவர்கள் அவ்விதஞ் சொல்ல இப்பூதலமானது துதிக்கும் வண்ணம் தங்களின் வீரத்தினது தகுதியாகத் தம்மைக் கருதாது நீட்டிய தாமரை மலரை நிகர்த்த அப்பாதத்தை மெதுவாக அத் துவாரத்தை விட்டு மிழுத்தார்கள். அவ்வாறு இழுக்கவே பிரகாசத்தைப் பரப்பி உச்சிக் கொண்டையையும் நெருப்பைப் போலும் கண்களையு முடைய அந்தச் சர்ப்ப மானது தெளிந்து அத் துவாரத்தை விட்டு மகன்று துருத்தியினிடத்துள்ள ஜலத்தை வெளியில் விட்டாற் போலும் சீக்கிரத்தில் தோற்ற மாகி நின்றது.

 

2603. நெட்டுடன் முடக்கி வாய்ந்த கழுத்தையு நிமிர்த்து நின்ற

     விட்டறா விடத்தின் பாந்த டனைவிழித் தெதிர்ந்து நோக்கி

     வட்டவா ருதிசூ ழெட்டுத் திக்கினு மணிவா னத்து

     மெட்டிய கீர்த்தி கொண்டோ ரினியன மொழிகள் சொல்வார்.

24

      (இ-ள்) நெடிய சரீரத்தை மடக்கிச் சிறந்த தனது கழுத்தையும் நிமிரச் செய்து அவ்வாறு நின்ற தன்னை விட்டகலாத நஞ்சைக் கொண்டவச் சர்ப்பத்தை வட்ட வடிவை யுடைய சமுத்திரமானது சூழப் பெற்ற இப் பூமியினது எண்டிசையிலும் அழகிய வான லோகத்திலும் போய் நெருங்கிய புகழைக் கொண்டவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் எதிர்த்துக் கண்களினாற் பார்த்துக் கூப்பிட்டு இனிமையை யுடையன வாகிய சில வார்த்தைகளைக் கூறுவார்கள்.

 

2604. அருமறைப் பொருளாய் நின்றோ னமைத்தபன் னகமே யாங்கள்

     வரையினோ ரிடுக்க ணுற்று வந்திருந் தனமல் லாமற்

     பரிவுட னுனக்கி யாது குற்றமும் பயின்ற துண்டோ

     தரையினெம் முன்னோர் முன்னா ளியற்றிய தவறு முண்டோ.

25

      (இ-ள்) அருமையான வேதார்த்தமாக நின்றோ னாகிய ஜல்ல ஷகுனகு வத்தஆலா வானவன் படைத்த சர்ப்பமே! நாங்கள் ஓர் துன்பத்தைப் பொருந்தி இம் மலையின் கண் வந்து தங்கினோம். அல்லாமல் ஆசையோடும் உனக்கு யாதெனுங் குற்றங்கள் செய்ததுண்டோ? இப்பூமியின் கண் எமது முன்னோர்கள் ஆதி காலத்தில் உனக்குச் செய்த யாதேனுங் குற்றங்க ளுள்ளதா,