பக்கம் எண் :

சீறாப்புராணம்

968


இரண்டாம் பாகம்
 

2605. ஏதொரு குறையுஞ் செய்த தின்றிவை யிகழ்ந்தெண் ணாம

     னீதமில் லவரைப் போல நெடும்புடை யதனின் வந்து

     தீதுறக் கொடிய வேகந் தலைகொளச் சினந்து சீறி

     வேதனைப் படவாய் வைத்த தென்னென விரைவிற் கேட்டார்.

26

      (இ-ள்) அப்படி நாங்கள் யாதொரு குறையுஞ் செய்யவில்லை. இவ்வாறு நீ செய்த கருமத்தை இகழ்ந் தெண்ணாமல் நியாய மற்றவர்களைப் போல நெடிய அத் துவாரத்தின் கண் தோற்றமாகித் தீமை பொருந்தும்படி கொடிய வேகமானது சிரசிற் கொள்ளக் கோபித் திரைந்து துன்பப்பட வாயை வைத்துக் கடித்தது யாது காரணமென்று விரைவில் கேட்டார்கள்.

 

கலிநிலைத்துறை

 

2606. மறையின் வாயுரை கேட்டெழின் முகம்மதை நோக்கி

     நிறுவி நின்றிடு நெடுந்தலை நிலத்திடை சேர்த்தி

     முறைமை யின்சலா முரைத்துமுள் ளெயிற்றுவாய் திறந்து

     குறைவி லாதுளத் திருந்தவை யனைத்தையுங் கூறும்.

27

      (இ-ள்) அவ்வாறு கேட்க, அந்தச் சர்ப்பமானது வேத வசனத்தைப் போலும் அவர்கள் வாயினால் கூறிய அவ் வார்த்தைகளைக் காதுகளினாற் கேள்வியுற்று அழகிய நாயகம் நபிகட் பெருமானார்நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கண்களினாற் பார்த்து நிறுத்தி நிற்குந் தனது நெடிய சிரத்தைப் பூமியின் கண் பொருத்தி ஒழுங்காக ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்று புகன்று முட்போன்ற பற்களையுடைய வாயைத் திறந்து குறைவில்லாது தனது இதயத் திடத் திருந்தவைக ளெல்லாவற்றையுஞ் சொல்லா நிற்கும்.

 

2607. ஆதி நாயகன் றிருநபி யேயிவ ணடியே

     னீதி யன்றியே தீண்டின னலனெடுங் காலம்

     பூத ரத்தினெம் முன்னவர் சிலமொழி புகன்றா

     ரேதெ னச்செவி கொடுத்திட வேண்டுமெய் யெழிலோய்.

28

      (இ-ள்) யாவற்றிற்கும் முதன்மையைக் கொண்ட எப்பொருட்கட்கு மிறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய நபிகட் பெருமானே! சரீரத்தினது அழகையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களே! அடியேனாகிய யான் இவ்விடத்தில் நீதி யல்லாமற் கடித்தே னல்லன். இவ்வுலகத்தின் கண் எங்களது முன்னோர்கள் நெடுங் காலமாகச் சில வார்த்தைகளைக் கூறினார்கள். அவ்வார்த்தைகள் யாதென்று தாங்கள் காது கொடுத்துக் கேட்டல் வேண்டும்.