பக்கம் எண் :

சீறாப்புராணம்

969


இரண்டாம் பாகம்
 

2608. செவ்வி நாயகன் றிருவொளி வினிலுருந் திரண்டு

     குவ்வி டத்தினி லுதித்தரும் புதுமையிற் குலவி

     யவ்வி யங்களைந் தகுமது நபியென வழகா

     யெவ்வெ வர்க்குநன் மறைநெறி நடத்துவ ரெனவும்.

29

      (இ-ள்) எப் பொருட்கு மிறைவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய அழகிய ஒளிவினில் தோற்றமாய்த் திரட்சியுற்று இப் பூலோகத்தின் கண்ணுதயமாகி அருமையான அற்புதங்களோடும் பிரகாசித்துப் பொறாமையை யொழித்து அஹ்மதென்னு அபிதானத்தை யுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மென்று அழகாக யாவர்கட்கும் நன்மை பொருந்தி புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது தீனுல் இஸ்லாமாகிய மெய்ம் மார்க்கத்தை நடத்துவார்களென்றும்.

 

2609. அவர்க்கு நல்வழி யாயிசு லாமினி லானோர்

     சுவர்க்க மெய்துவ ரெனவுமச் சொல்லினைக் கடந்தோர்

     பவக்க டற்கிடந் தலைகுவ ரென்னவும் பரிவி

     னுவக்கும் வேற்றுருச் சமயங்க ளொழிந்திடு மெனவும்.

30

      (இ-ள்) அந் நபிகட் பெருமான் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்கு நல்வழிப்பட்டுத் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தி லானோர்கள் மோட்ச லோகத்தைப் போய்ச் சேர்வார்க ளென்றும் அந்த வார்த்தைகளைத் தாண்டி நடந்தவர்கள் பாவமாகிய சமுத்திரத்திற் கிடந்து அலைகுவார்க ளென்றும் ஆசையோடும் விரும்பா நிற்கும் வெறுமையான ஜெபத்தி னுருவையுடைய மார்க்கங்கள் அழியுமென்றும்.

 

2610. பொருவி லாக்கடற் புவிநடு மக்கமா புரத்தி

     னரிய நாயகன் றிருமறை விளக்கியங் கிருந்திவ்

     வரையி னுந்தனி வருகுவ ரென்னவு மதீனாத்

     திருந கர்க்கர சிருந்துதீன் றிருத்துவ ரெனவும்.

31

      (இ-ள்) ஒப்பற்ற சமுத்திரத்தை யுடைய இப்பூலோகத்திற்கு மத்திமமாகிய திரு மக்கமா நகரத்தில் அருமையான எப்பொருட்கு மிறைவனாகிய ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை விளங்கச் செய்து அவ்விடத்தில் தங்கியிருந்து இந்தத் தௌறு மலையின் கண்ணும் ஒப்பற வருவார்களென்றும், மதீனா வென்னும் அழகிய நகரத்திற்கு அரசராக இருந்து தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை எவ்விடத்துந் திருந்தச் செய்வார்க ளென்றும்.