இரண்டாம் பாகம்
2611.
இனைய வாசக மனைத்தையு முணர்ந்துளத்
திருத்திக்
கனியுஞ் சிந்தையுங் கண்களுங்
களிப்புற நோக்கிப்
புனித மாகுவ தென்றெனத் தினந்தொறும்
பொருவா
நினைவி னேர்வழித் தவத்தொடு
மிருந்தன னெடுநாள்.
32
(இ-ள்) இப்படிப்பட்ட
வார்த்தைக ளெல்லாவற்றையும் யானறிந்து அவ்வார்த்தைகளை மனத்தின் கண் இருக்கும் வண்ணஞ் செய்து
கரையா நிற்கும் இதயமும் நயனங்களும் மகிழ்ச்சி யடையும்படி அந்நபிகட் பெருமானவர்களைப் பார்த்து
நம்மைப் பரிசுத்த மாக்கிக் கொள்ளுவதெக் காலமென்று பிரதி தினமும் ஒன்றும் ஒப்பாகாத எண்ணத்துடன்
நீண்ட நாளாக உண்மையான மார்க்கத்தை யுடைய தவத்தோடு மிருந்தேன்.
2612.
இற்றை யின்முதன் மூன்றுநாட்
டொடுத்திறும் பிடத்திற்
குற்ற மற்றபே ரொளியொடு
மான்மதங் குலவி
வற்று றாப்புது மணத்தொடுங்
கமழ்ந்தன மனத்தி
னுற்றி தேதெனக் குறித்திடா
தொருவளை யுறைந்தேன்.
33
(இ-ள்) இன்றையத் தினத்திற்கு
முன்னர் மூன்று நாடொடக்கமாக இந்தத் தௌறு மலையின் கண் களங்கமில்லாத பெரிய பிரகாசத்துடன்
கத்தூரி வாசனையானது பிரகாசித்துக் குறையாத புதுமையையுடைய பரிமளத்துடன் பரிமளித்தன. யான் மனத்தினிடத்து
இவ்வாறு இங்கு பொருந்தியது என்ன காரணமென்று அவற்றைக் கருதாது ஒரு வளையின் கண் தங்கியிருந்தேன்.
2613.
அந்த ரத்தினு நிலத்தினும்
பெருங்குவ டனைத்தும்
வந்து வானவர் புகழ்தர வருஞ்சல
வாத்தைச்
சிந்தை கூர்தரப் புகல்வது கேட்டுளந்
தேறி
யெந்தம் நாயக ரிவணுறைந்
தனரென விசைந்தேன்.
34
(இ-ள்) அவ்வாறு தங்கியிருக்க,
ஆகாயத்திலும் பூமியிலும் பெரிய இந்தத் தௌறு மலை முழுவதிலும் தேவர்க ளான மலாயிக்கத்துமார்கள்
வந்து கீர்த்தி யுண்டாகும் வண்ணம் அருமையாகிய சலவாத்தை மன மகிழும்படி கூறுவதையுங் காதுகளினாற்
கேள்வியுற்று இதயமானது தெளித லடையப் பெற்று எமது நாயகரான நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இங்கு வந்து தங்கியிருக்கின்றார்களென்று மனத்தின்
கண் பொருந்தினேன்.
2614.
தொல்லை வல்விலை தொடர்பவங்
களைந்துநற் சுவனத்
தெல்லை யின்பதங் கிடைத்ததின்
றெனத்தவழ்ந் தேகி
வொல்லை யிற்குவ டடங்கலுந்
தேடின னொளிருங்
கல்ல கத்துழை கண்டன
னிருவிழி களிப்ப.
35
|