இரண்டாம் பாகம்
2621.
நெறியு ரைத்தனை கண்டனை நிலநெடுங்
காலத்
துறவு கொண்டனை பவத்தொடர்
துன்பமு மொழித்தாய்
குறைவ றப்பலன் படைத்தனை
வாழ்ந்துநின் குலத்தோ
டுறைகெ னப்புக ழொடுமுரைத் தனர்மறை
யுரவோர்.
42
(இ-ள்) வேதங்ளினது அறிஞ ரான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் அச்சர்ப்பத்தை நோக்கி நீ நீதியைச் சொல்லினாய், எம்மையுங் கண்களினாற்
பார்த்தாய், இப் பூமியின் கண் நீண்ட காலத்தினது சிநேகத்தையுங் கொண்டாய், பாவத்தினது தொடர்பாகிய
வருத்தத்தையும் இல்லாமற் செய்தாய், குறைவில்லாது பலனையும் பெற்றாய், நீ உனது கூட்டத்தோடும்
போய் வாழ்ந்து வைகுவாயாக வென்று கீர்த்தியோடுங் கற்பித்தார்கள்.
2622.
வேத நாயக ருரைத்தலும் விடத்தெயிற்
றரவம்
பாத மென்மல ரிடத்தினிற் சிரங்கொடு
பணிந்து
கோத றக்கலி மாவெடுத் தோதிமெய்
குழைத்துப்
பூத ரத்துறு நெடுவளை யிடைப்புகுந்
ததுவே.
43
(இ-ள்) நான்கு வேதங்களுக்கும் நாயகரான நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய மாத்திரத்தில் நஞ்சைக் கொண்ட
பற்களை யுடைய அந்தச் சர்ப்பமானது அவர்களினது சரணங்ளாகிய மெல்லிய தாமரை மலரின்கண்
தலையைக் கொண்டு தாழ்ந்து களங்க மற ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு என்னுங் கலிமாவை
எடுத்துச் சொல்லித் தனது சரீரத்தைக் குழையும் வண்ணஞ் செய்து அந்த தௌறு மலையினிடத்துப்
பொருந்திய நீண்ட வளையின் கண் போய் நுழைந்தது.
2623.
அரவ கன்றபி னெழிலபூ பக்கர்செம்
மலர்த்தாள்
விரித ருங்கடி வாயினிற்
கொடுவிட மகல
மரையி தழ்த்துளி நீரினை விரலினால்
வாங்கிப்
புரைய றத்தட வினர்செழும்
புகழ்முகம் மதுவே.
44
(இ-ள்) செழிய கீர்த்தியை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு அந்தச் சர்ப்ப மானது அகன்று சென்ற பிற்பாடு அழகையுடைய அபூபக்கர்
சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களின் செந்நிறத்தைக் கொண்ட தாமரைப் புட்பத்தை நிகர்த்த
பாதத்தி னிடத்து விரிந்த கடியின் கண் கொடிய அந் நஞ்சானது நீங்கும் வண்ணம் வனச மலரை யொத்த
அதரங்களை யுடைய வாயினது புனற் றிவலையைத் தங்களின் கை விரலினால் வாங்கிக் குற்ற மறும்படி
அதில் தடவினார்கள்.
|