இரண்டாம் பாகம்
2634.
ஆவி போலுறு தோழரு மரசநா
யகருங்
காவின் கானையும் வளைசெறி
பொறைகளுங் கடந்தார்
பூவி ரிந்தசூட் டளகொடும்
புள்ளினம் புலம்ப
வீவி லாக்கனைத் திரைக்குணக்
கடற்றிசை வெளுத்த.
9
(இ-ள்) அவ்வாறு செல்ல,
தங்களின் பிராணனைப் போலும் பொருந்திய நேசரான அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு
அவர்களும் இராஜாதிபராகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்களும் சோலைகளை யுடைய காடுகளையும் வளைகள் நெருங்கிய மலைகளையுந் தாண்டிச் சென்றார்கள்.
விரிந்த அழகிய உச்சிக் கொண்டையை யுடைய சேவல்களோடு அவற்றின் பெடைக ளாகிய பட்சி சாலங்கள்
ஒலிக்கும் வண்ணம் மாறாத ஓசையைக் கொண்ட அலைகளை யுடைய வளைந்த கீழ்பாற் சமுத்திரத்தின் திக்கானது
வெண்மை யுற்றது.
2635.
மட்டு வார்பொழில் சூழ்தரு
மக்கமா நகரம்
விட்டு நந்நபி கொடியவெங்
கானிடை விளங்கப்
பட்ட காரண மெவைகொலென்
றஞ்சியுட் பயத்தோ
டெட்டிப் பார்ப்பபோ லெழுந்தன
னெடுங்கதி ரிரவி.
10
(இ-ள்) நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்
தேனானது வடியப் பெற்ற சோலைகள் சூழ்ந்த திரு மக்கமா நகரத்தை விடுத்துக் கொடுமையை யுடைய வெவ்விய
காட்டினிடத்து அவ்வாறு வந்து விளங்கிய முகாந்தரம் யாவை? என்று நெடிய கிரணங்களை யுடைய சூரிய
னானவன் பயந்து மன அச்சத்தோடும் எட்டி நோக்குவதைப் போன்று எழும்பினான்.
2636.
இரவின் முட்செறி வனங்கடந்
திரவிதோன் றியபின்
பரல்கி டந்தவெம் பாலையிற்
பகனடுப் போதி
லொருகு றும்பொறை யிடத்தினி
லறிவுறு முரவோர்
விரைவி னேகியங் கிறங்கினர்
நிகழிலா வெயிலின்.
11
(இ-ள்) அறிவைப்
பொருந்திய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அவ்
வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் அவ் விராப் பொழுதில் முட்கள் நெருங்கிய அக்
காடுகளைத் தாண்டி நடந்து சூரியன் உதயமாயின பின்னர்ப் பரற்கற்கள் கிடக்கப் பெற்ற கொடிய
பாலை நிலத்தின் கண் ஒரு சிறிய மலையினிடத்து நிழலில்லாத வெயிலிற் பகற் பொழுதினது மத்தியான
வேளையில் விரைவிற் போய் இறங்கினார்கள்.
|