பக்கம் எண் :

சீறாப்புராணம்

979


இரண்டாம் பாகம்
 

2637. கடங்க டந்துமெய் வருந்தியங் கிருந்தகா வலர்க்கோர்

     படங்க லின்புறம் விரித்திருந் தனரபூ பக்க

     ரடங்க லாரெனுங் குபிரறுத் திடவவ தரித்த

     மடங்க லேறெனத் துயில்புரிந் தனர்முகம் மதுவே.

12

      (இ-ள்) அவ்வாறு அந்தக் காடுகளைத் தாண்டிச் சென்று தங்களின் சரீரமானது வருந்தப் பெற்று அவ்விடத்தில் தங்கிய அரசரான நாயகம் நபிகட் பெருமானவர்களுக்கு அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் ஓர் வத்திரத்தின் நுனியை பூமியின் மீது விரித்துப் பக்கத்தி லுட்கார்ந்தார்கள். சத்துராதிகளென்று கூறா நிற்கும் காபிர்களை அறுக்கும் வண்ணம் இவ்வுலகத்தின் கண் தோற்றமாகிய நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஆண் சிங்கத்தை நிகர்த்து அவ் வத்திரத்தின் மீது படுத்து நித்திரை செய்தார்கள்.

 

2638. பஞ்சின் மெல்லணை விடுத்தரும் பரலினிற் படுத்த

     மஞ்சு லாங்குடை யரசரை நோக்கிவஞ் சகரான்

     மிஞ்சும் வல்வினை யெனத்திசை தொறும்விழி பரப்பி

     யஞ்சி யையமுற் றிருந்தனர் துணையபூ பக்கர்.

13

     (இ-ள்) துணைவ ராகிய அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் பஞ்சினை யுடைய மெல்லிய படுக்கையை விட்டு அரிய பரற் கற்களினிடத்து அவ்வாறு சயனித்த மேகங்கள் உலவா நிற்கும் குடையை யுடைய வேந்தரான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து வஞ்சகத்தை யுடையவர்களாகிய அந்தக் காபிர்களால் கொடிய துன்பமானது வந்து அதிகரிக்கு மென்று சொல்லித் திசைக ளெல்லாவற்றிலும் தங்களின் கண்களானவை பரவும் வண்ணம் நோக்கிப் பயந்து சந்தேகமடைந்திருந்தார்கள்.

 

2639. செறிம யிர்த்திரு கியமருப் புடைச்சிறு கவைக்காற்

     குறும றித்திர ளொடுமயிர்ப் போர்வைதோட் கொண்டு

     வெறிக மழ்ந்திவ ணிருப்பவ ரெவரென வியந்து

     தறிகை கோல்கடை காலொடு சார்ந்துநோக் கினனால்.

14

      (இ-ள்) அவர்கள் அவ்வாறிருக்க ஒருவன் நெருங்கிய உரோமங்களையும் திருகிய கொம்புகளையும் பிளந்த சிறு பாதங்களையு முடைய சிறிய ஆட்டுக் கூட்டங்களோடு உரோமத்தினாலான போர்வையைப் புயத்தினிடத்துத் தாங்கிக் கொண்டு கத்தூரி வாசனை யானது பரிமளிக்கும் வண்ணம் இவ்விடத்தி லுறைபவர்கள் யாவர்? என்று அதிசயித்துக் கையினிடத்துள்ள தறித்த கொம்பைக் காலுடன் சேர்த்து ஊன்றிக் கொண்டு பார்த்தான்.