இரண்டாம் பாகம்
2640.
அடைந்து நோக்கிய தொறுவனை
விளித்தபூ பக்கர்
மிடைந்த விக்கொறி
நின்னதோ பிறரதோ விளம்பென்
றிடைந்தி லாமொழி
கொடுத்தலுந் திரியமென் னுருக்க
ளொடும்பு றச்சில கூலியு
முளதென வுரைத்தான்.
15
(இ-ள்) அவ்வாறு அங்கு
வந்து பார்த்த அந்த இடையனை அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் கூப்பிட்டு
நெருங்கிய இவ்வாடுகள் உன்னுடையனவா? அன்னியருடையனவா? யாருடையனவென்று நீ கூறுவாயாக வென்று
துன்பமற்ற வார்த்தைகளைச் சொல்லிக் கேட்ட மாத்திரத்தில், அவன் சஞ்சரியா நிற்கும் எனது
உருக்களாகிய ஆடுகளுடன் கூலிக்காக மேய்க்கின்ற பக்கத்திலுள்ள சில ஆடுகளு முள்ளனவென்று
கூறினான்.
2641.
கூலி யின்கொறி
விடுத்துநின் கொறியினைக் குறுகிப்
பாலி னைக்கறந் திவண்டரு
கெனப்பணிந் தோடிக்
காலி னைத்தகைத் துறுங்கடை
காலினிற் கறந்து
சீல முற்றவ ரிடத்தினிற்
கொடுத்தனன் றிறலோன்.
16
(இ-ள்) அவ்விதம் கூற,
நீ கூலிக்காக மேய்க்கின்ற ஆடுகளை விட்டு உனது ஆடுகளை யடைந்து அவற்றிற் பாலைக் கறந்து இங்கு
என்னிடத்தில் கொண்டு வந்து தருவாயாக வென்று கேட்க, வலிமையையுடையவனான அவ் விடையன்
அவ்வார்த்தைகளைக் கேள்வியுற்ற மாத்திரத்தில் அவர்களை வணங்கி விரைந்து சென்று தனது
ஆடுகளில் சிலவற்றிற்குக் காலைக் கட்டிப் பாலை உற்ற ஒரு கடைகாலினிற் கறந்து
நல்லொழுக்கத்தைப் பொருந்தினவர்களான அவ் வபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு
அவர்களிடத்தில் கொண்டு வந்து கொடுத்தான்.
2642.
வில்லு மிழ்ந்தமெய்
முகம்மதுந் துயிலினை விடுத்திட்
டொல்லை யின்னெழுந்
திருந்தபி னுயிரெனுந் துணைவர்
முல்லை மன்னவன் றருநறும்
பாலினை முறையாச்
செல்லு லாங்கரத்
தளித்தலும் பொசித்தனர் சிறப்ப.
17
(இ-ள்) பிரகாசத்தைக்
கக்கப் பெற்ற சரீரத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் விரைவில் தங்களின் நித்திரையை விட்டும் எழுந்திருந்த
பின்னர்த் தங்களின் பிராணனெனக் கூறா நிற்கும் நேசராகிய அவ் வபூபக்கர் சித்தீகு
றலியல்லாகு அன்கு அவர்கள் முல்லை நிலத்தினது அரசனான அவ்விடையன் அவ்வாறு கொடுத்த நறிய
அந்தப் பாலை ஒழுங்குடன் மேகங்க ளானவை யுலாவுகின்ற கைகளில் கொடுத்த வளவில், அதை சிறக்கும்
வண்ணம் வாங்கி அருந்தினார்கள்.
|