பக்கம் எண் :

சீறாப்புராணம்

98


முதற்பாகம்
 

பிள்ளையானவர் முதன்மையான ஜல்லஷானகுவத்த ஆலாவினது றசூலாகயிருப்பார், அவர் பெயராகிறது முஹம்மதா யிருக்குமென்று மிக்க நீதியான சோபனத்தை அவ்வாமினா அவர்கள் பெறும்படி சொன்னார்கள்.

 

218. என்றும் வானவ ரிசைத்திடுங் கனவெலா மெடுத்தும்

    வென்றி நன்னபி மார்சொலுங் கனவெலாம் விரித்து

    மன்ற லங்குழ லாமினா படிப்படி வகையா

    நன்றி தேர்ந்தசொற் றாயர்க்குத் தினந்தொறு நவின்றார்.

53

     (இ-ள்) வாசனைபொருந்திய அழகிய கூந்தலையுடைய ஆமினா அவர்கள் வானவரான மலக்குக ளெப்போது மிடைவிடாது வந்து சொல்லாநிற்கும் சொப்பனங்க ளெல்லாவற்றையுமெடுத்தும், வெற்றியையுடைய நன்மையுள்ள நபிமார்கள் மாதந்தோறும் வந்து சொல்லாநிற்கும் சொப்பனங்க ளெல்லாவற்றையும் விளக்கியும், தரந்தரமாய் வகுப்பாக நன்மையைக் கசடறக் கற்றுணர்ந்த தாயாராகிய பர்றா அவர்களுக்கு அப்போதைக்கப்போது சொல்லி வந்தார்கள்.

 

219. பெற்ற தாயருங் கனவினின் பெற்றியைப் பிரித்தே

    யுற்ற பேரொடு மனத்தொடுந் தெளிந்தறிந் தோர்ந்து

    சொற்ற தன்மகட் குறிப்பெலாங் காண்குறத் துணிந்து

    குற்ற மின்றிய முகம்மதே பெயரெனக் குறித்தாள்.

54

     (இ-ள்) அவற்றைக் கேட்ட மாத்திரத்தில் ஆமினா அவர்களை யீன்ற தாயாராகிய பர்றாவும் தம்மனத்துடனேயும் சேர்ந்த பேர்களுடனேயும் தம்முடைய மகளார்கண்ட சொப்பனத்தின் இனிய தன்மையைப் பிரித்துத் தெளிவாய் ஆராயந்தறிந்து சொப்பனங்கண்டு சொன்ன தமது மகளாராகிய ஆமினா அவர்களின் அடையாளங்க ளெல்லாவற்றையும் நாட்கு நாட்காண யாதொரு குற்றமுமில்லாத முஹம்மதென்பதே அப்பிள்ளைக்குப் பெயாரகுமென்று துணிவாய்க் குறிப்பிட்டார்கள்.

 

220. செறிந்த வார்குழ லாமினா வுரைத்தசெய் தியைக்கேட்

    டறிந்து தாயதற் கெதிர்மொழி கொடுத்தலு மாராய்ந்

    துறைந்த வல்லிருட் சீத்தெறி மதியென வோங்கி

    நிறைந்த பேரொளி முகமலர் தரசபா நிகழ்த்தும்.

55

     (இ-ள்) நெருக்கமுற்ற நீண்ட கூந்தலையுடைய ஆமினா அவர்கள் சொன்ன சொப்பனத்தின் சமாச்சாரத்தை அவர் தாயாராகிய பர்றாவானவர் கேட்டு இன்னபடியென் றறிந்து கொண்டு அச்சமாச்சாரத்திற்கு மறுமொழி கொடுத்த மாத்திரத்தில், தங்கிய வலியவிருளைச் சீத்தெறியாநிற்கும் சந்திரனைப்போல வுயர்ந்து