பக்கம் எண் :

சீறாப்புராணம்

992


இரண்டாம் பாகம்
 

     சவிதரள வுருவெடுத்தோ ரிரங்கார்மே

          லிரங்கியுரை சாற்றி னாலும்

     புவிவிடுவ தலவிறுதி முடிந்ததெனப்

          பொருமலொடும் புலம்பி னானால்.

44

      (இ-ள்) அன்றியும், அந்த அபூஜகி லென்பவனுடைய வார்த்தைகளை மனத்தின் கண் தெளிந்து நான்கு திக்கி னிடத்தும் பரவிச் சென்றவர்களைப் போலாகாதபடி இந்த முகம்ம தென்பவர் செல்லுகின்ற இந்தத் திக்கில் நம்மைக் கொண்டு வந்து துன்பத்தைப் புரிந்தது நமது ஊழாகும், நாம் வருத்தப் படுவதால் என்ன பிரயோசனம்? ஒன்றுமில்லை. அழகிய பிரகாசத்தையுடைய முத்தினது வடிவத்தை எடுத்தவரான இந்த முகம்ம தென்பவர் கசியாதவ ராகிய நம்மீது கசிந்து கட்டளை செய்தாலும் இப் பூமியானது நம்மை விடக் கூடிய தல்ல, நமக்கு முடிவே முடிந்த தென்று சொல்லி அழுது புலம்பினான்.

 

2670. மனைமனைவி புதல்வர்பொரு ளவைநினைந்து

          கண்ணீர்வார்ந் தொழுகி யோட

     வினுமுகம்ம தினைப்பரவிக் கேட்கிலவ

          ரிரங்குவரென் றிதயந் தேறித்

     தனியவன்றன் றிருத்தூதே முகம்மதுவே

          பொறைக்கடலே தமியேன் கூற்றை

     யுனதுசெவிக் கிடவேண்டும் வேண்டுமென

          விரக்கமொடு முரைக்கின்றானால்.

45

      (இ-ள்) அன்றியும், வீடு, மனைவி, மக்கள், செல்வமாகிய அவைகளைச் சிந்தையின் கண் கருதிக் கண்ணீரானது வடிந்து நீண்டு ஓடும் வண்ணம் நாம் இன்னும் இந்த முகம்ம தென்பவரை வணங்கிக் கேட்டால் நம் மீது அவர் கிருபை வைப்பா ரென்று  மனதி னிடத்துத் தெளித லடைந்து ஏக னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய றசூலே! முகம்ம தென்னும் அபிதானத்தை யுடையவரே! பொறுமையினது சமுத்திர மானவரே! தனித்தவனான எனது வார்த்தைகளைத் தங்களது காதுகளுக்கு இட்டுக் கேட்டல் வேண்டும்! வேண்டும்!! என்று சொல்லிக் கசிதலோடும் கூறுவான்.

 

2671. என்போலுஞ் சிறியர்பெரும் பழியடுத்த

          குறைபிழையா யிரஞ்செய் தாலும்

     பொன்போலு மனப்பெரியோர் பொறுப்பரெனு

          மொழிதமியேன் புந்திக் கேற்ப

     நின்பாலிற் கண்டறிந்தேன் சிறியேனுய்

          திறத்தினொடிந் நிலத்தில் வாழ

     முன்போலுங் காத்தளித்தல் வேண்டுமது

          நினதுமறை முறைமைத் தாமால்.

46