பக்கம் எண் :

சீறாப்புராணம்

996


இரண்டாம் பாகம்
 

உம்மிமகுபதுப் படலம்

 

கலிநிலைத் துறை

 

2676. காயும் வெஞ்சுரத் திடைதொடர்ந் தனன்மனங் கலங்கிப்

     பாயும் வீரவெம் பரியுடன் வரும்வழி பார்த்துப்

     போய பினபூ பக்கரு முகம்மதும் புளகித்

     தேயி ழிந்தறி வுடன்றொழு தவிடம்விட் டெழுந்தார்.

1

      (இ-ள்) நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும், அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும், சுடா நிற்கும் கொடிய அப்பாலை நிலத்தின் கண் தங்களைப் பின்பற்றி வந்தவனாகிய அந்தச் சுறாக்கத் தென்பவன் தனது இதயமானது கலக்க மடையப் பெற்றுத் தாவிச் சாடும் வல்லமையையுடைய வெவ்விய குதிரையோடும் தான் வந்த பாதையை நோக்கித் திரும்பிச் சென்ற பின்னர், மகிழ்ச்சி யடைந்து தாங்கள் ஏறி யிருந்த ஒட்டகத்தை விட்டும் பூமியி லிறங்கிப் புத்தி யுடன் ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவை வணங்கி அந்தத் தானத்தை விட்டு மெழும்பினார்கள்.

 

2677. கறையில் வெண்டிரை யுண்டவண் கவிகைமுன் னிழற்றக்

     குறையு நீடருத் தளிர்த்தலர் நறவுகொப் பிளிப்பப்

     பறவை யெங்கணுஞ் செழும்புகழ் பாடவொட் டகத்தின்

     முறையி னேகின ரிறையரு ணிறைமுகம் மதுவே.

2

      (இ-ள்) அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணியம் பொலியப் பெற்ற அவ்வா றெழும்பிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் குற்ற மற்ற வெண்ணிறத்தினது அலைகளை யுடைய சமுத்திரத்தின் நீரை அருந்திய அழகிய மேகக்குடையானது முன்னே நிழலைச் செய்யும், குறைவு பட்ட நீண்ட விருக்கங்கள் தழைத்து அவற்றின் புஷ்பங்கள் தேனைச் சொரியவும், பட்சிகள் எவ் விடத்தும் தங்களின் செழிய கீர்த்தியைப் படிக்கவும், ஒழுங்கோடும் ஒட்டகத்தின் மீது சென்றார்கள்.

 

2678. கரைகொ ழித்தவெண் வண்டலு நெடியகான் யாறுந்

     திரைய லம்பயி குறுஞ்சுனை யிடங்களுஞ் செறிந்து

     விரைகொண் முல்லையம் பந்தரும் விளைநறா வுடைந்து

     சொரியுங் கொன்றையுந் தோன்றிடச் சென்றனர் தூயோர்.

3