பக்கம் எண் :

முதற் காண்டம்286

     இதழ்க் கட்டு அவிழ்ந்த செந்தாமரை வாசனை விரவும் தேனைப்
பொழிந்தது போல, விண்மீன்கள் செறியும் முடியை அணிந்த மரியாள் வாய்
திறந்து பேசிய இனிய சொல்லால், தேன் நிறைந்துள்ள மலர்க்கொடியை
உடையவனாகிய சூசை தன் செவியால் அவ்வின்பத்தை உண்டு,
"சொல்லலாமே," என்று சொல்ல, அது தானே பொருந்தித் தந்த விடையாகக்
கொண்டு, பணிந்து ஏற்று இவள் பின்வருமாறு சொல்லுகின்றாள்:

 
14
"தணிக்கரிதா மைம்பொறிகள் சார்பொருள்சார்ந் துளம் பிரிந்து
துணிக்கரிதாம் விழைவாத லிளமையின்கட் டோன்றுதலாற்
கணிக்கரிதா மருட்புரிந்த கடவுளொன்றே மனஞ்சேரச்
குணிக்கரிதா மிருளீனுங் கோதினிமை நசை வெறுத்தேன்.
 
"தணிக்க அரிது ஆம் ஐம் பொறிகள் சார் பொருள் சார்ந்து,
                                          உளம் பிரிந்து,
துணிக்க அரிது ஆம் விழைவு ஆதல் இளமையின்கண்                                           தோன்றுதலால்,
கணிக்க அரிது ஆம் அருள் புரிந்த கடவுள் ஒன்றே மனம் சேர,
குணிக்க அரிது ஆம் இருள் ஈனும் கோது இனிமை நசை
                                          வெறுத்தேன்."

     "அடக்குவதற்கு அரிய ஐம்பொறிகள் தாம் இயல்பாகச் சாரும்
பொருளையே சார்ந்து நின்று, உள்ளத்தை விட்டு விலகி, அறுத்தெறிவதற்கு
அரிய ஆசையாக உருவாதல் இளமைப் பருவத்தில் தோன்றக்
கண்டமையால், கணக்கிடுவதற்கு அரிய அருளை எனக்கு வழங்கிய கடவுள்
ஒருவனையே என் மனத்தில் சேர வைத்து, மதிப்பிடுதற்கு அரிய இருளைப்
பிறப்பிக்கும் பாவத்திற் காணும் இன்பமாகிய ஆசையை வெறுத்து
ஒதுக்கினேன்."

     தணிக்கரிது என்பது போல் அடிதோறும் முதற்கண் வந்தனவெல்லாம்,
தணிக்க + அரிது - தணிக்கவரிது என்பது போல் வர வேண்டியவற்றின்
தொகுத்தல் விகாரங்கள்.