பக்கம் எண் :

முதற் காண்டம்293

     இவ்விருவரும் கண் முதலாகவுள்ள ஐம்பொறிகளாகிய கதவுகளைத்
தீய நெறியிற் செல்லாது அடைத்துக்கொண்டுள்ளமையால், மண்ணுலகைச்
சார்ந்த சிற்றின்பமெல்லாம் மனத்துள் புகாமல், உயர்ந்த விண்ணுலகம் முதல்
எல்லாம் ஆண்ட அரசனாகிய இறைவன் இவர் தம் உள்ளமாகிய இடத்தைத்
தனிப்பட்ட முறையில் அடைந்திருந்து மகிழ்ச்சியோடு ஆள்வான்.
 
                   25
ஐங்கத வவடைத்ததற் கறநற் காவலாய்த்
தங்கத வடுத்தபற் பொருட்ட டுத்துளத்
திங்கது கொணருணர் விட்ட பின்விடைப்
பங்கது பகர்ந்துளப் பகையற் றோங்குவார்.
 
ஐங் கதவு அடைத்து, அதற்கு அறம் நல் காவலாய்,
தம் கதவு அடுத்த பல் பொருள் தடுத்து, உளத்து
இங்கு அது கொணர் உணர்விட்ட பின், விடைப்
பங்கு அது பகர்ந்து, உளப் பகை அற்று ஓங்குவார்.

     ஐம்பொறிகளாகிய கதவை அடைத்து, அக்கதவிற்கு ஒழுக்கத்தை
நல்ல காவலாக நிறுத்தி, அதன்மூலம் தத்தம் கதவை அடுத்து வந்த பல
பொருள்களையும் தடுத்து வெளியே நிறுத்தி, அப்பொருள் தன்னோடு
இங்கே கொண்டு வரும் உணர்வை மட்டும் உள்ளத்தில் புக விட்ட பின்,
அவ்வுணர்வுக்கு விடைப் பாகமாகக் கூறத்தக்கதைக் கூறி, இவ்வாறு
அவ்விருவரும் தம் உள்ளத்தில் எதன் மீதும் பகை இல்லாமல் அறத்தில்
எழுச்சி கொள்வர்.

     விடை பகர்தலாவது, நல்லுணர்வாயின் ஏற்றுக் கொள்ளுதலும்
தீயுணர்வாயின் புறக்கணித்தலுமாம், 'உணர்வு' என்பது முதனிலைத்
தொழிற் பெயராக விகுதி குறைந்து 'உணர்' என நின்றது.
 
             26
மானமே வேலியாய் வகுத்த சொற்றரும்
ஞானமே தூதனாய் நயப்ப யாவருந்
தானமே தோழனா யறிவின் றன்மையால்
வானமே யுறையுளாய் மடிவில் வாழுவார்.