|
தவம் என்னும்
கடலின் கரை கண்டவனாகிய சூசை, "பாவத்தை
வெறுத்து ஒதுக்கி, இப்பூவுலகில் பரந்து கிடக்கும் துன்பங்கள் வலுவற்றுப்
போகுமாறு உயிரைக் காத்து, அசையாத நன்மையைப் பயனோடு கொணரும்
துணையாது என்று கேட்டால், நிலை பெற்ற மானிட உயிர்களுக் கெல்லாம்
வீணே துயரத்தைத் தரும் 'நான்', 'எனது' என்று அமைந்த இரு வகைப்
பற்றுகளையும் இனிதே அறுத்து ஒழிக்கும் தவமே உயிர்களுக்கு ஒப்பற்ற
துணையாம்" என்றான்.
'நான் என்று
பெருமை பாராட்டும் அகந்தையாகிய அகப்பற்றும்,
'எனது' என்று உரிமை பாராட்டும் ஆணவமாகிய புறப்பற்றும் தவத்தால்
நீங்குமென்பது கருத்து. "யான் எனது என்னும் செருக்கறுப்பான்.
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்" (குறள் 346)
|
54
|
பொதிரு முட்டா
டாமரையோ பொதிர்முட் புறவுட்
சுவைக்கனியோ
வதிரு மொலியால் வெருவுய்த்தே யவனி வுவப்பப் பெய்முகிலோ
வெதிரு மொன்னார்க் கோங்கரணோ வெவரு மஞ்சு
முருக்காட்டிக்
கதிரு மின்பார் தவமென்றாள் கருணைப் பவ்வக் கரையில்லாள். |
| |
"பெதிரும் முள்
தாள் தாமரையோ, பொதிர் முள் புற உள் சுவைக்
கனியோ,
அதிரும் ஒலியால் வெரு உய்த்தே அவனி உவப்பப் பெய் முகிலோ,
எதிரும் ஒன்னார்க்கு ஓங்கு அரணோ, எவரும் அஞ்சும் உருக்
காட்டிக்
கதிரும் இன்பு ஆர் தவம்?" என்றாள் கருணைப் பவ்வக் கரை
இல்லாள். |
கருணை என்னும்
கடலுக்குக் கரை இல்லாத மரியாள், "எவரும்
கண்டு அஞ்சத்தக்க கோலத்தை வெளியே காட்டி உள்ளே ஒளிரும் இன்பம்
நிறைந்துள்ள தவம், தன் தண்டில் முள் நிறைந்துள்ள தாமரை மலரோ? தன்
புறத்தே நிறைந்த முட்களையும் உள்ளே சுவையுள்ள சுளைகளையும்
கொண்டுள்ள பலாப் பழமோ? அதிரும் இடியின் ஓசையால் அச்சத்தைப்
பிறப்பித்து உலகமெல்லாம் மகிழுமாறு மழையைப் பொழியும் மேகமோ?
எதிர்த்து வரும் பகைவர்க்கு முன் உயர்ந்து நிற்கும் கோட்டையோ?"
என்றாள்.
|