பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்18

     வேதத்தை வகுத்துத் தரும் ஆண்டவனுக்கு உற்ற துயரத்தின்
காரணமாக இவர்கள் இடும் கண்ணீரைக் கண்டு, தாமும் அத்துன்பத்தை
முற்றும் உணர்ந்ததை அறிவிக்கும் முகமாக, அங்குள்ள எல்லாக்
கோழிகளும், தம் மார்புகளைச் சிறகுகளால் புடைத்துக்கொண்டு,
வானத்தை எட்டுமாறு கூக்குரல் எழுப்பிக் கூவும்.



              33
பேர்ந்த தன்பெரு மானடை பீழைவா
னோர்ந்த தன்மையு ளைந்தழு தாலென
வார்ந்த தண்பனி தாரையின் மல்கியன்
றார்ந்த பைந்தழைக் காவழு தாயதே.
 
பேர்ந்த தன் பெருமான் அடை பீழை வான்
ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என,
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று,
ஆர்ந்த பைந் தழைக் கா அழுது ஆயதே.
     
     தன்னை விட்டுப் பெயர்ந்து மண்ணுலகம் அடைந்த தன் ஆண்டவன்
அடையும் துன்பத்தை வானம் உணர்ந்து கொண்ட தன்மையாக வருந்தி
அழுதாற்போல, அன்று வடித்த குளிர்ந்த பனியாகிய கண்ணீர் மழைத்
தாரைபோல் மிகுதியாகப் பெய்து, நிறைந்த பசுமையான இலைகளைக்
கொண்டுள்ள காடும் அழுதது போல் ஆயிற்று.

     பசுமை + தழை - பைந்தழை.

             34
கறாக றாவெனக் காடைக லுழ்ந்தன
ஞறாஞ றாவெனத் தோகைக ணைந்தழும்
புறாகு றாவுத லோடிவர் போதலா
லறாந றாப்பொழி லாரழு மோதையே.
 
கறாகறா எனக் காடை கலுழ்ந்தன;
ஞறாஞறா எனத் தோகைகள் நைந்து அழும்;
புறா குறாவுதலோடு, அவர் போதலால்,
அறா நறாப் பொழில் ஆர் அழும் ஓதையே.

     இவர்கள் தம்மைவிட்டுப் பிரிந்து போதலால், காடைகள்
கறாகறாவென்று அழுதன; மயில்கள் வருந்தி ஞறாஞறாவென்று அழும்;
புறாக்கள் குறாகுறாவென்று அழுவதனோடு, அவையும் சேர்ந்து, என்றும்
அறாத தேனைக்கொண்டுள்ளசோலை, நிறைந்த ஓசையோடு அழும்.

     ஒப்பு நோக்குக 1 : 45.