பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்25

     'இடர் வேண்டுங் கொல்லோ?' என மாற்றிக் கூட்டுக. 'கொல்'
இடையே அசை நிலை.



                7
முற்றுமுத லாயுலக மூன்றுதொழ வான்மேற்
பெற்றுமுத லீறிலபெ ருந்தகையை மண்மே
லுற்றுமுதல் வீடிலவி லங்குறையுள் வந்தா
யிற்றுமுத னாடகலல் வேண்டுமினிக் கொல்லோ.
 
முற்று முதல் ஆய், உலகம் மூன்று தொழ வான்மேல்
பெற்று, முதல் ஈறு இல பெருந் தகையை, மண்மேல்
உற்று, முதல் வீடு இல, விலங்கு உறையுள் வந்தாய்;
இற்று முதல் நாடு அகலல் வேண்டும், இனி, கொல்லோ?

     "முழு முதற் கடவுளாய், உலகங்கள் மூன்றும் தொழுமாறு வான்மேல்
வீற்றிருந்து, முதலும் முடிவுமில்லாத பெருந்தகையாகிய நீ, இம்மண்ணுலகை
அடையத் திருவுளங்கொண்டு, வீடு முதலாய் இல்லாமல், விலங்குகளின்
உறைவிடத்தில் வந்து பிறந்தாய்; இனி, இன்று முதல் இந்நாட்டை விட்டும்
அகல வேண்டுமோ?

               8
"ஞானமுறு சீலமில நட்புறவு மில்லா
வானமுறு வேதமில மாண்பருளு மில்லா
கானமுறு காய்ந்தசுர மக்கடைகி டந்தா
ரீனமுறு நாடடைதல் வேண்டுமினிக் கொல்லோ.
 
"ஞானம் உறு சீலம் இல, நட்பு உறவும் இல்லா,
வானம் உறு வேதம் இல, மாண்பு அருளும் இல்லா,
கானம் உறு காய்ந்த சுரம் அக்கடை கிடந்தார்
ஈனம் உறு நாடு அடைதல் வேண்டும், இனி,
                               கொல்லோ?

     "இனி, இந்நாட்டைவிட்டு அகலுதற் கண்ணும், ஞானம் தழுவிய
ஒழுக்கம் இல்லாமல், நமக்கு நட்பும் உறவும் இல்லாமல், வானுலகம்
அடைவதற்குரிய வேத அறிவு இல்லாமல், மனித மாண்பும் தெய்வ
அருளும் இல்லாமல், காடாய்ப் பரந்து வெயிலால் காய்ந்த
பாலைவனத்திற்கும் அப்பால் வாழ்ந்திருப்பவர்தம் ஈனம் மிகுந்த
நாட்டையே அடைதல் வேண்டுமோ?