பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 10

கூம்புளங்க கடுத்த வஞ்சங்
      குணமெனச் சொல்வார் தேடி
யோம்புளந் தெளிந்த நூலோ
       ரொருங்கிட னழைத்தல் செய்தான்.
 
தேம்பு உளம் கூசத் தோன்றும் திருவிளக்கு அவித்து,மீண்டு
சாம்பு உளம் கருதும் தீமை தன்மையே சாரா தோன்றக்
கூம்பு உளம் கடுத்த வஞ்சம் குணம் எனச் சொல்வார்த்தேடி
ஓம்பு உளம் தெளிந்த நூலோர் ஒருங்கு உடன் அழைத்தல்
                                        செய்தான்.

      வருந்துகின்ற தன் மனமே கூசுமாறு தோன்றிய மெய்யறிவாகிய
திருவிளக்கை அவித்தான். மீண்டும் வாடுகின்ற தன் மனம் கருதிய தீமை
தன்னைச் சாராமல் பிறர் கண்ணுக்குத் தோன்றுமாறு கருதினான்.
ஒடுங்குகின்ற தன் உள்ளத்தில் உதித்த கடுமையான வஞ்சகத்தைக்
குணமென்று சொல்வாரைத் தேடினான். கல்வியைப் பேணுகின்ற
உள்ளத்தால் தெளிந்த நூலறிவு படைத்தோரையெல்லாம் ஒன்றாக
உடனே அழைப்பித்தான்.

      சாரா - சாராது: ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

 
            16
சொரிசுமந் திடுங்கா ரொப்பத்
      துளிக்கையிற் சலுமோ னின்ற
வெரிசுமந் திலங்கி மின்னு
      மினமணி நிரைத்திட் டீரா
றரிசுமந் தெழுந்த பைம்பொன்
      னாசனத் திருந்து தோன்றி
வரிசுமந் தடும்வெவ் வேங்கை
      மறத்தொடு பொலிய நின்றான்.
 
சொரி சுமந்திடும் கார் ஒப்பத் துளிக் கையின் சலுமோன் நின்ற
எரி சுமந்து இலங்கி மின்னும் இனமணி நிரைத்து இட்டு ஈராறு
அரி சுமந்து எழுந்த பைம்பொன் ஆசனத்து இருந்து தோன்றி
வரி சுமந்து அடும் வெம் வேங்கை மறத்தொடு பொலிய நின்றான்.