|
மழை
பொழிய நீரைச் சுமந்து நிற்கும் கார்மேகம் போலக் கொடை
மழை, பொழிந்த கையையுடைய சலமோன் மன்னன் நிலைபெற்றிருந்த
அரியணை, நெருப்பொளியைச் சுமந்து இலங்கி மின்னும் பலவகை
மணிகளை வரிசையாகப் பதித்த அரியணை பன்னிரண்டு பொற்சிங்கங்கள்
தாங்கியவாறு உயர்ந்து நின்ற அரியணை, பசும்பொன்னாற் செய்த
அரியணை, அதன் மீது கொலு வீற்றிருந்தான்; தன் உடலில் வரிகளை
உடையதாய்க் கொல்லும் தன்மை வாய்ந்த கொடிய வேங்கையின்
வீரத்தோடு அழகு விளங்க நின்றான். (I அரச. 10 : 18 - 20)
| 17 |
மந்திரி
மாரும் வாய்ந்த
வளந்தருந்
தவரு நன்னூற்
றந்திரி மாருந் தானைத்
தலைவரு
மொருங்கு கூடி
யிந்திரி யலைபொங் கொத்த
திடையிடை
மொய்ப்ப நின்றான்
சிந்திரி மலைமே லாடுஞ்
செழுங்கொடி
யொத்த நெஞ்சான். |
| |
மந்திரிமாரும்,
வாய்ந்த வளம் தரும் தவரும், நன்னூல்
தந்திரிமாரும், தானைத் தலைவரும் ஒருங்கு கூடி
இந்திரி அலை பொங்கு ஒத்தது இடையிடை மொய்ப்ப நின்றான்,
சிந்திரி மலை மேல் ஆடும் செழுங் கொடி ஒத்த நெஞ்சான். |
அமைச்சரும்,
நாட்டிற்கு வாய்ந்த வளம் பெற்றுத் தரும் தவ
முனிவரும், நல்ல நூல்களைக் கற்றறிந்த புலவர்களும், படைத்தலைவரும்
ஒன்றாய்க்கூடி, கீழ்திசைக் கடலில் அலை பொங்குவதை ஒத்த தன்மையாய்
இடையிடையே மொய்க்க அருவி பாயும் உயர்ந்த மலை மேல் ஆடும்
செழுமையான கொடியை ஒத்து அசைந்தாடும் நெஞ்சம் படைத்த எரோதன்
அவர்கள் நடுவே நின்றான்.
இந்திரி
- கிழக்கு : அது 'அலை' என்ற சொல்லோடு தொடர்பு
பட்டு, அத்திசைக் கடலைக் குறித்தது: நிலை கொள்ளாது அலையும்
நெஞ்சிற்கு உயர்ந்த மலைமேல் அருவிபாய அசைந்தாடும் கொடி உவமை.
'செழுங்கொடி' என அடை பெற்றமையால், இது முல்லை போன்ற கொடி
வகை யென்று கொள்க.
|