பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 13

      "பகைவர்தம் கொடிய பகையெல்லாம் அழிந்து ஒழியும்படி நான்
இருந்து ஆளுகின்ற, கற்றவர் கல்வி மேம்பாட்டாற் கூறும்
வளங்களையெல்லாம் கடந்து மேலோங்கி நிற்கின்ற இந்நாட்டில், வேறு
யாரோ ஒரு மன்னன் தோன்றி இங்கு வந்துள்ளான் என்று உலகமெல்லாம்
ஒரு சேரக் சொல்லலாயிற்று.

 
                  20
அன்னா னீங்குள னென்றறை வாரை
முன்னா னானுந கைத்துமு னிந்தேன்
பின்னா ளாயின பெற்றியை யெண்ணி
யென்னா லாவதி யம்புமி னென்றான்.
 
"அன்னான் ஈங்கு உளன் என்று அறைவாரை
முன்னால் நானும் நகைத்து முனிந்தேன்;
பின்நாள் ஆயின பெற்றியை எண்ணி,
என்னால் ஆவது இயம்புமின்" என்றான்.

      "அவன் இந்நாட்டிலுள்ளே பிறந்துள்ளான் என்று கூறுவாரையெல்லாம்
முன்னால் நானும் நகைத்துச் சினந்தேன் பின் நாட்களில் நிகழ்ந்தவற்றின்
தன்மைகளையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்த்து,என்னால் ஆகவேண்டிய காரியத்தைச் சொல்லுங்கள்" என்றான் எரோதன்.

      பின் நாள் ஆயின பெற்றி : ஏழாம் பாடல் காண்க.

 
                    21
என்றா னாடிய டுத்தவை யென்னத்
தன்றா ழாமுக முள்ளவை தந்து
நின்றான் கோட்டமு ணர்ந்திடை நின்றார்
குன்றா நேர்நெறி கோடியு டைந்தார்.
 
என்றான்; ஆடி அடுத்தவை என்னத்
தன் தாழா முகம் உள்ளவை தந்து
நின்றான். கோட்டம் உணர்ந்து இடை நின்றார்
குன்றா நேர் நெறி கோடி உடைந்தார்.

      அவன் அவ்வாறு சொன்னான்; கண்ணாடி தனக்கு முன்
அடுத்தவற்றைக் காட்டுவதுபோலத் தன் சினம் தணியாத முகம் மனத்தில்
உள்ளவற்றைக் காட்டிய வண்ணம் நின்றான். மன்னனது மனக்கோட்டத்தை
உணர்ந்து அங்கு நின்றவர்கள், தாமும் தவறாத நேர்மை நெறி தவறிச்
சிதைந்தார்.