பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 14

      "அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம், கடுத்தது காட்டும்
முகம்" என்பது குறள் (706)

 
                 22
கோற்கொண் டாரவர் கொள்கையை நோக்கி
மேற்கொண் டாரும்வி ளம்புவ ரென்றார்
நூற்கொண் டாரென நூலற யாரு
மாற்கொண் டாரற மாற்றுரை கொண்டார்.
 
'கோல் கொண்டார் அவர் கொள்கையை நோக்கி
மேல் கொண்டாரும் விளம்புவர்' என்றார்
நூல் கொண்டார்; என, நூல் அற யாரும்
மால் கொண்டார் அறம்மாற்று உரை கொண்டார்.

      அறநூல் இயற்றித் தந்தோர், 'செங்கோலைக் கையிற்
கொண்டவராகிய அரசர்தம் கருத்தை நோக்கி மேலான அறிவு
கொண்டவரும் அதற்கேற்பக் கூறுவர்' என்று கூறியுள்ளனர். எனவே, தாம்
கற்ற அறநூல் பயனற்றுப் போகுமாறு யாவரும் மயக்கங்கொண்டவராய்
அறநெறிக்கு மாறுபட்ட சொல்லைக் கொண்டு கூறலாயினர்.

 
               23
வள்வாய் மாமுர சார்ப்பொலி மாறாக்
கள்வா யாளுவ மன்னவ காதல்
கொள்வாய் வாய்மொழி கொள்கென மீண்டே
எள்வாய் நாபனி யம்புத லுற்றான்
 
"வள் வாய் மா முரசு ஆர்ப்பு ஒலி மாறாக்
கள் வாய் ஆளுவ மன்னவ, காதல்
கொள் வாய் வாய்மொழி கொள்க" என மீண்டே
எள் வாய் நாபன் இயம்புதல் உற்றான்.

      இகழத்தக்க வாயை உடைய நாபன், "வாரால் முறையாகக் கட்டிய
பெரிய முரசின் ஆரவார ஒலி மாறாத, தேன் சிந்தும் நாட்டை ஆளும்
மன்னனே, உன் மீது அன்பு கொண்ட வாயினின்று பிறக்கும் உண்மை
மொழியைக் கேட்டுக் கொள்வாயாக" என்று தொடங்கித் தொடர்ந்து
பேசலானான்.