பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 15

      கள் வாய் - கள்ளுள்ள இடம், தேன் சிந்தும் நாடு; இது நாட்டின்
செழுமை குறித்தது. ஆளுவ - ஆளும்: இப்பெயரெச்சம் செய்யுள்
ஓசைக்காக விரித்தல் விகாரம் பெற்று நின்றது, 'காதல் கொள்வாய்' அது
உண்மை கூறாமை குறிப்பால் உணர நின்றது. கொள்கென -கொள்க+என =
'கொள்கவென' என வரவேண்டியது தொகுத்தல் விகரமாய் நின்றது.

 
                         24
துஞ்சித் திண்பகை முற்றுடை யாதார்
விஞ்சித் திண்பகை முற்றிய வேலை
யெஞ்சித் திண்டிற லெள்ளுறல் காண்பார்
நெஞ்சில் றிண்டிற னேர்மதி வல்லோய்
 
துஞ்சித் திண்பகை முன் துடையாதார்
விஞ்சித் திண் பகை முற்றிய வேலை
எஞ்சித் திண்திறல் எள்ளுறல் காண்பார்,
நெஞ்சில் திண்திறல் நேர்மதி வல்லோய்.

      'நெஞ்சிற் பொருந்திய உறுதியான வலிமைக்கு நிகராக அறிவிலும்
வல்லவனே, சோம்பியிருந்து வலிமை வாய்ந்த பகையை முதலிலே முழுதும்
அழிக்கத் தவறுவோர், அப்பகையானது தம் வலிமைக்கு மிஞ்சி முதிர்ந்த
வேளை அதற்கு ஈடுகொடுக்கத் தவறித் தம் வலிமை இகழப்படுதலைக்
காண்பார்.

     'விளைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீ் எச்சம்
போலத்தெறும் என்ற குறளை 879 ஒப்பு நோக்குக.'

 
                  25
அன்றுற் றேகின வண்ணல் ரோடுஞ்
சென்றுற் றேபகை தீர்கில நாமே
யின்றுற் றீர்கில மேற்பழி வெள்ளம்
பின்றுற் றாழ்குதும் பேதையர் போன்றே.
 
"அன்று உற்று ஏகின அண்ணல ரோடும்
சென்று உற்றே பகை தீர்கிலம் நாமே;
இன்று உற்று ஈர்கிலமேல், பழிவெள்ளம்
பின்று உற்று ஆழ்குதும் பேதையர் போன்றே.

      "அன்று இங்கு வந்து போன மூவரசரோடு நாமும் சென்று சேர்ந்து
அப்பகையைத் தீர்க்கத் தவறிவிட்டோம்; இன்றேனும் சென்று அதனை
அறுத்தெறியத் தவறுவோமாயின், அறிவிலார் போலப் பின்னாளில்
பழியாகிய வெள்ளத்துள் விழுந்து மூழ்குவோம்.