களெல்லாம் - முன்னிரண்டடியில் திருவேங்கடத்தின் சிறப்பையும், பின் னிரண்டடியில் திருவேங்கடமுடையானது சிறப்பையுங் கூறி "ஊர்" என்னுந் துறை யமைய "திருவேங்கடமென்பது திருமாலின் திருப்பதி" என்னும் வாய்பாடு பொருந்த இயற்றப்பட்டுள்ளன. இந்நூலின் பிற்பாதியாகிய ஐம்பது செய்யுள்களின் முன்னிரண்டடிகள் - இத்தன்மையோடு சிலேடை யென்னும் அலங்காரமு முடையன. இந்நூற் செய்யுள்க ளெல்லாவற்றிலும் பின்னிரண்டடிகள் - பெரும்பாலும் திரிபு என்னுஞ் சொல்லணியும், சிறு பான்மை யமகம் என்னுஞ் சொல்லணியும் அமையக் கூறப்பட்டுள்ளன. காப்பு. காப்பு - காத்தல். அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும். ஆகவே, கவி தமக்குநேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்லதோர் கடவுளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து. இக்காப்புச்செய்யுள், ஆழ்வார்கள் பன்னிருவருட் பிரதானரான நம்மாழ்வாரைப் பற்றியது. ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச் செய்யுள், விஷ்ணு பக்தர்களிற் சிறந்த ஆழ்வாரைக் குறித்த தாதலால், வழிபடுகடவுள்வணக்க மாம். தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலே யன்றி அக்கடவு ளின் அடியார்களை வணங்குதலும் வழிபடுகடவுள் வணக்கத்தின் பாற்படு மென அறிக. அவ்வாழ்வாரால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற் பொருட் கருத்துக்க ளமைய அப்பிரபந்தங்கள்போலச் செய்யப் படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி, இந்நூலின் இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்கடவுள் வணக்கமென்று அரிதிற்கொள்ளவும் அமையும். | திண்பார் புகழுந் திருவேங் கடமாலை | | வெண்பாவா னூறும் விளம்புதற்குக் - கண்பாராய் | | நாராய ணாவடியே னாடுந் தமிழ்வேத | | பாராய ணாசடகோ பா. | (இதன்பொருள்.) நாராயணா - நாராயணனே! அடியேன் நாடும் - உனது அடியவனாகிய என்னால் மிகவும் விரும்பப்படுகிற, தமிழ்வேத பாராயணா - தமிழ் வேதங்களாகிய திவ்வியப்பிரபந்தங்களைக் கூறியருளியவனே! சடகோபா - சடகோப னென்னுந் திருநாமமுடையவனே! - திண் பார் புகழும் - வலிய பூலோகத்திலுள்ளவர்கள் எல்லாராலும் புகழப்படுகின்ற, திருவேங்கடம் - திருவேங்கடமென்னுந் திருப்பதியின் விஷயமான, மாலை - மாலை யென்னும் பிரபந்தரூபமாக, நூறும் - நூறுசெய்யுள்களையும், வெண்பாவால் - வெண்பாவென்னும் யாப்பினால், விளம்புதற்கு - (அடியேன்) சொல்லும்படி, கண் பாராய் - கிருபைசெய்தருள்வாய்; (என்றவாறு.) அடியேன் - அடிமை யென்னும் பண்பி னடியாகப் பிறந்த தன்மை யொருமைக் குறிப்பு வினையாலணையும்பெயர். "அடியேனாடும்" என்றது. |