அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு, அதனை இங்ஙனம் முதலிற் கூறினார். இவ்வரலாற்றில், திருமாலே பரம்பொருளாந்தன்மை வெளியாம். "பாலாய வேலை நடுவில் துயிலும் வித்தகன்" என்றது, பரத்வம் வியூகம் விபவம் அர்ச்சை அந்தர்யாமித்வம் என்ற எம்பெருமானது ஐவகை நிலைகளுள் வியூகநிலையை உணர்த்தும். பாலாயவேலை - திருப்பாற்கடல். ஆய, ய் - இறந்தகால இடைநிலை. (2) அவையடக்கம். அவையடக்கமாவது - கற்றோர்சபைமுன் கவி தன்னைப்பற்றித் தாழ்த்திக் கூறுதல். அவை - ஸபா என்ற வடசொல்லின் சிதைவு. அடக்கம் - தொழிற்பெயர்; அடங்கு - பகுதி, அம் - விகுதி, வலித்தல் - விகாரம். | ஆழ்வார்கள் செந்தமிழை யாதரித்த வேங்கடமென் | | றாழ்வான புன்சொல்லுந் தாங்குமா - லேழ்பாரும் | | வெல்லுங் கதிர்மணியும் வெம்பரலுஞ் செஞ்சாந்தும் | | புல்லும் பொறுத்தமையே போல். | (இ - ள்.) ஏழ் பாரும் - ஏழு உலகங்களையும், வெல்லும் - (தமக்கு) விலையாகக் கொள்ளும்படியான, கதிர் மணியும் - ஒளியையுடைய இரத்தினங்களையும், வெம் பரலும் - வெவ்விய பருக்கைக்கற்களையும், செம் சாந்தும் - சிவந்த சந்தன மரங்களையும், புல்லும் - புற்களையும், பொறுத்தமையே போல் - தான் தரிக்கின்ற தன்மையே போல, - ஆழ்வார்கள் செந் தமிழை ஆதரித்த வேங்கடம் - ஆழ்வார்கள் அருளிச்செய்த செவ்வியதமிழ்ப் பாசுரங்களை அன்புடன் ஏற்றுக்கொண்ட திருவேங்கடமலையானது, என் தாழ்வு ஆன புல் சொல்லும் தாங்கும் - என்னுடைய மிகவும் இழிவாகிய பாடல்களையும் ஏற்றுக்கொள்ளும்; (எ - று.) - ஆல் - ஈற்றசை; தேற்றப் பொருளதுமாம். மிகச்சிறந்த இரத்தினங்களோடு ஒப்ப மிகவும் இழிவான பருக்கைக் கற்களையும், சிறந்த சந்தனமரங்களோடு ஒப்பச் சிறப்பில்லாத புற்களையும் திருவேங்கடமலை தன்மேற் கொள்ளும் இயல்பின தாதலால், அவ்வாறே அம்மலை ஆழ்வார்களுடைய மிகச் சிறந்த தமிழ்ப்பாசுரங்களோடு ஒப்ப எனது மிகத்தாழ்ந்த பாடல்களையும் அங்கீகரிக்கும் என்னுந் துணிவுபற்றி, யான் இப்பிரபந்தம் பாடத்தொடங்கினேன் என்பதாம் உபமான உபமேயங்க ளில் முறைநிரனிறை இருத்தல் காண்க. பகவானுடைய திவ்விய மங்கள குணங்களாகிய அமுதவெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவ ராதலால், இவர்களுக்கு, ஆழ்வார் என்று திருநாமம். ஸ்ரீவைஷ்ணவமதத்திற் சிறந்தமெய்யடியார்க ளென்று கொண்டாடப்படுகின்ற ஆழ்வார்கள் பன்னிருவர்; அவராவார் - |