பக்கம் எண் :

திருவேங்கடமாலை399

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், (அவரதுசிஷ்யரான) மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், (அவர்வளர்த்த திருமகளாரான) ஆண்டாள், தொண்ட ரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என இவர். இவர்களில் தொண்டரடிப்பொடியாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் தவிர்ந்த மற்றைப்பதின்மரும் திருவேங்கடத்தைப் பாடினரென அறிக. "ஏழ்பாரும் வெல்லுங் கதிர்" என்பதற்கு - எல்லாவுலகங்களிலுஞ் சென்று பரவி இருளை வென்று அகற்றும் ஒளியையுடைய என்று உரைப்பினும் அமையும். ஏழ்பாரும் வெல்லும் - ஏழுஉலகங்களிலும் (எல்லாஇரத்தினங்களினும்) மேம்பட்ட என்றுமாம். தமிழ் சொல் - பாடல்களுக்குக் கருவியாகு பெயர். தாழ்வான, புல் - ஒருபொருட்பன்மொழி. ஏழ்பார் - கீழேழும் மேலேழும் ஆக ஈரேழுலக மென்க. செந் தமிழ் - சுத்தமான தமிழ்.

நூல்

1.பொன்னு மணியும் பொலிந்தோங்கிப் பார்மகட்கு
மின்னு மணிமுடியாம் வேங்கடமே - மன்னும்
பரமபத நாட்டினான் பையரவின் சூட்டிற்
கிரமபத நாட்டினான் சேர்வு.

(இ - ள்.) பொன்னும், - மணியும் - நவரத்தினங்களும், பொலிந்து - (தன்மீது) விளங்கப்பெற்று, ஓங்கி - தான் உயர்ந்திருத்தலால், பார்மகட்கு மின்னும் மணி முடி ஆம் - பூமிப்பிராட்டிக்கு விளங்குகின்ற இரத்தினகிரீ டம்போலிருக்கிற, வேங்கடம் - திருவேங்கடமலையானது, - மன்னும் - நிலை பெற்ற, பரமபதம் நாட்டினான் - பரமபதமென்னுந் திருநாட்டையுடையவனும், பை அரவின் சூட்டில் - படத்தையுடைய (காளியனென்னும்) பாம்பினது முடியிலே, சிரம பதம் நாட்டினான் - ஆட்டப்பயிற்சியையுடைய திருவடிகளை நிறுத்தி நடனஞ்செய்தவனு மாகிய எம்பெருமான், சேர்வு - (திரு வுள்ளமுவந்து) சேர்ந்திருக்குமிடமாம்; (எ - று.) - ஆம் - உவமவுருபு.

வேங்கடம் சேர்வு எனமுடிக்க; இம்முடிபு, இந்நூற்செய்யுளெல்லாவற் றுக்கும் ஒக்கும். ஏ - ஈற்றசை; பிரிநிலையாகக்கொள்ளின், இத்திருப்பதி எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றையெல்லாத் திவ்வியதேசங்களினும் மிகவும் பாங்கான வாசஸ்தானமென்னுங் கருத்துஅமையும்; அங்ஙனம் சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும். முன்னிரண்டடி - வடிவுபற்றி வந்த உவமையணி. பரமபதம் என்றும் அழிவில்லாது நித்தியமாயிருத்தலால், அதற்கு, "மன்னும்" என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. பரம பதம் - சிறந்த ஸ்தாநம். பரமபத நாடு - பரமபதமாகியநாடு; இருபெயரொட்டு.

வருந்துதலென்னும் பொருளைத் தருகின்ற ச்ரமம் என்னும் வடசொல்லின் திரிபாகிய சிரமம் என்பது - "சிலைக்குரு விறற்குருகுலகுமரருக்கு