வரு சிரமநிலை காண்மி னெனவே" என்ற வில்லிபுத்தூரார் பாரதச் செய்யுளில் படைக்கலப்பயிற்சி யென்னும் பொருளில் வந்தது போல, இங்கு நடனப்பயிற்சி யென்னும் பொருளில் வந்தது. கண்ணன் காளியனுடைய முடியின்மேல் ஏறி நர்த்தநஞ்செய்தருளும்போது ஐந்துதலைகளையுடைய அந்நாகம் எந்தெந்தப்படத்தைத் தூக்குகின்றதோ அந்தந்தப்படத்தைத் துவைத்து நர்த்தனஞ்செய்து நின்று அப்பாம்பின்வலிமையை யடக்கி அதனை மூர்ச்சையடையச் செய்கையில் பலவகை நடனத்திறங்களைச் செய்து காட்டியமை தோன்ற, "சிரமபதநாட்டினான்" என்றார்; அத்தன்மையை, "சுவாமிநர்த்தனமுறைமையில் வட்டமாய்ச் சுற்றுவது முதலான பிராந்தி கதிகளினாலும், ஒருபக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்துக்குப் போவது முதலான ரேசககதிகளினாலும், பாதத்தை முன்நீட்டிவைப்பதாகிய தண்ட பாதகதியினாலும், அந்தச் சர்ப்பராசன் நசுங்கி மிகுந்த உதிரத்தையுங் கக்கினான்" என்ற விஷ்ணுபுராணவாக்கியத்தால் நன்கு அறிக. "கானகமாமடு விற் காளிய னுச்சியிலே, தூயநடம்பயிலுஞ் சுந்தர", "காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட் டவ, னீண்முடி யைந்திலு நின்று நடஞ்செய்து, மீள வவனுக் கருள் செய்த வித்தகன்" என்ற ஆழ்வாரருளிச் செயல்களையுங் காண்க. இனி, சிரமபதம் நாட்டினான் என்பதற்கு - வருத்தத்தன்மையை உண்டாக்கியவ னென்றும், சிரமத்தை நீக்குகின்ற திருவடியை நிறுத்தியவ னென்றும், மற்றுஞ் சிலவாறும் நலிந்துபொருள்கொள்ளுகின்ற உரைக ளெல்லாம் சிறவாமை காண்க. நாட்டினான் - தனது திருவடிபதிந்ததழும்பு என்றும் நிலையாக இருக்கும்படி அழுந்த வைத்தவன்; "ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம்; உன் சிரசில் என்திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு உன்னை அவன் ஒன்றுஞ் செய்யமாட்டான்" என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க. சேர்வு - தொழிலாகுபெயர். "சேர்பு" என்றும் பாடம். நாட்டினான் என்பது - மூன்றாமடியில் நாடு என்னும் பெயரினடியாகப் பிறந்த குறிப்பு வினையா லணையும் பெயரும், நான்காமடியில் நாட்டு என்னும் பிறவினைப் பகுதியடியாப் பிறந்த தெரிநிலைவினையாலணையும் பெயருமாம்; முந்தினதில், இன் - சாரியை; பிந்தினதில், இன் - இறந்த காலவிடைநிலை. எல்லா நூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது மர பாதலால், "பொன்" என்று தொடங்கினார். மங்கலச் சொற்கள் இன்ன வென்பதை "சீர் மணி பரிதி யானை திரு நில முலகு திங்கள், கார் மலை சொல்லெழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறுமிவைமூவாறு மிதிற் பரியாயப்பேரும், ஆரு மங்கலச்சொற் செய்யுளாய்ந்து முன்வைக்க நன்றாம்" என்ற நிகண்டினால் அறிக. (1) 2. | சோதிமதி வந்துதவழ் சோலைமலை யோடிரண்டாய் | | மேதினியாள் கொங்கைநிகர் வேங்கடமே - போதி | | லிருப்பாற் கடலா னிபமூர்ந்தார்க் கெட்டாத் | | திருப்பாற் கடலான் சிலம்பு. | |