பக்கம் எண் :

திருவேங்கடமாலை401

(இ - ள்.) சோதி மதி வந்து தவழ் - ஒளிநிறைந்த சந்திரன் வந்துதவ ழப்பெற்ற (மிகவும்உயர்ந்த), சோலைமலையோடு - திருமாலிருஞ்சோலைமலை யோடு சேர்ந்து, இரண்டு ஆய் - இரண்டாகி, மேதினியாள் கொங்கை நிகர் - பூமிப்பிராட்டியினது இரண்டுதனங்கள் போல்கின்ற, வேங்கடமே -, - போதில் இருப்பாற்கு - தாமரைமலரில் இருப்பவனான பிரமதேவனுக்கும், அடல் ஆன் இபம் ஊர்ந்தார்க்கு - வலிமையையுடைய ருஷபத்தையும் ஐராவதயானையையும் (முறையே வாகனமாகக்கொண்டு) ஏறிச்செலுத்துபவரான சிவபிரானுக்கும் தேவேந்திரனுக்கும், எட்டா - எட்டாத, திருபால் கடலான் - திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டிருப்பவனான திருமாலினது, சிலம்பு - திருமலை; (எ - று.)

"சோதிமதிவந்துதவழ் சோலைமலை" என்றது, தொடர்புயர் வுநவிற்சியணி. "சோலைமலையோ டிரண்டாய் மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடம்" என்றது, உவமையணி. சிறப்பும் உயர்வு முள்ள வடக்குத் திருமலையாகிய திருவேங்கடமும், தெற்குத்திருமலையாகிய திருமாலிருஞ்சோலை மலையும், பூமியாகிய பெண்ணின் இரண்டு தனங்களாக வருணிக்கப்பட்டன. பருத்த வடிவத்தையும், மிக்க வலிமையையும், பூமிதேவியின் நாயகனான திருமால் விரும்புமிட மாதலையும் விளக்கும் உவமை. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமடலில் "தென்ன னுயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னு மிவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கு" என்றதை அடியொற்றியது, இவ்வருணனை, அதன் வியாக்கியாநத்தில், "மேரு மந்தராதிகளைச் சொல்லாதே திருமலைகளைச் சொல்லுவா னென் னென்னில், - முலைகளாகின்றன, காந்தன் விரும்பி விடாதே படுகாடுகிடக்குமவையாய்த்து; ஸர்வேச்வரன்விரும்பி நித்யவாசம்பண்ணுமிடங் களிறே இரண்டு திருமலைகளும்" என்ற வாக்கியம் இங்கு உணரத்தக்கது. "பொதியமு மிமயமும் புணர்முலை யாக" என்ற பெருங்கதையோடும், "கொங்கையே பரங்குன்றமுங் கொடுங்குன்றும்" என்ற திருவிளையாடற் புராணத்தோடும் இதனை ஒப்பிடுக. மிகப்பலவான சோலைகளையுடையதாதலால், சோலைமலையென்று திருநாமம்: "வநகிரி" என்று வடமொழிப்பெயர்; "ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே" என்றார் பெரியாழ்வாரும். இத்திருமலை, பாண்டியநாட்டி லுள்ளது.

"பத்துடைய டியவர்க் கெளியவன் பிறர்களுக்கு அரிய, வித்தகன்" என்றபடி எம்பெருமான் அன்புமிக்க அடியார்கட்கு எளியவனாவனேயன்றி அகங்காரத்தோடு "நாம் தேவர்" என்கிற அமரர்கட்கு எளியவனல்ல னென்பது, பின்னிரண்டடியில் விளக்கப்பட்டது. எட்டாமை - மனத்தினால் நினைத்தற்கும், மொழியினாற் சொல்லுதற்கும், மெய்யினாற் சேர்தற்கும் இயலாதபடி இருத்தல். எட்டாஎன்றது, திருப்பாற்கடலானுக்கு அடைமொழி. ஆன் என்ற பொதுப்பெயர் - இங்கு, பசுவின் ஆணின்மேல் நின்றது. போது - சிறப்பாய்த் தாமரையைக் குறித்தது.                                                                                                                

(2)