ராவணன் முதலியோரை, லோகவந்தனைக்கு அழித்தார் - உலகத்தார் தம்மை வழிபட்டதற்கு இரங்கிக் கொன்றவருமான திருமாலினது, ஊர் - திருப்பதி.(எ - று) மாது அங்க வேள் கைமறந்து இகழும் - பெண்ணாசையை அறக்கை விட்ட என்றபடி. மா தங்கம் வேள் கைமறந்து இகழும் எனக்கொண்டு மிக்க பொன்னாசையை அறத்தொலைத்த வென உரைப்பினுமாம். கைமறந்து என்பதில், கை என்பது - தனியே பொருளொன்றுமுணர்த்தாமல் வினைக்குமுன் வந்த தமிழுபசர்க்கம்; கைவிடுதல், கைகூடுதல் என்பவற்றிலும் இது. வாள் அரி - ஒளியையுடைய சிங்கமுமாம். ஹரி - வடசொல்; யானை முதலிய விலங்குகளை அரிப்பது: அரித்தல் - அழித்தல். மாதங்கம் என்ற வடசொல் - யானையைக் குறிக்கும்போது மதங்க முனிவரிடத்தினின்று ஆதியில் உண்டானதெனக் காரணப்பொருள்படும். கவந்தன் - தநுஎன்னும் யக்ஷனதுமகன்; இவன் ஸ்தூலசிரஸ்என்னும் முனிவரது சாபத்தால் அரக்கனாகிப் பிரமனருளால் தீர்க்காயுசு பெற்றுத் தேவேந்திரனோடு எதிர்த்து அவனது வச்சிராயுதத்தாற் புடைபட்டுத் தனது தலை வயிற்றில் அழுந்தியமைபற்றிக் கவந்தம் போலத் தோற்ற முடையனா யிருந்ததனால், இப்பெயர் பெற்றான். கபந்தம் என்ற வடசொல்லுக்கு - தலை யற்றதும் தொழிலுடன் கூடியதுமான உடலென்பது பொருள். "உலக மென்பது உயர்ந்தோர் மாட்டே" என்பதற்கு ஏற்ப, இங்கே "லோகவந்தனைக்கு" என்பதற்கு - தண்டகாரணியவாசிகளான மகாமுனிவர்களுடைய வேண்டுகோளினாலென்க. வந்தனைக்கு - உருபுமயக்கம். (91) 92. | கூட்டு தவத்தவருங் கோளரிக ளின்றொகையும் | | வேட்டு வரம்பொழியும் வேங்கடமே - மொட்டுமதத் | | தந்திக் கமலத்தார் தாம்பெறூஉம் வீடளித்தா | | ருந்திக் கமலத்தா ரூர். | (இ - ள்.) கூட்டு தவத்தவரும் - மேன்மேற் செய்துசேர்த்த தவத்தை யுடைய முனிவர்களும், (அப்பெருந்தவத்தின் சித்தியால்), வேட்டு வரம் பொழியும் - விரும்பி (அன்புடனே) (தம்மிடம் வேண்டுவார் வேண்டிய வரங்களை மிகுதியாகக்கொடுத்தற்கிடமான: கோள் அரிகளின் தொகையும் - வலிமையுள்ள சிங்கங்களின் தொகுதியும், வேட்டுவர் அம்பு ஒழியும் - வேடர்கள் எய்கிற பாணங்கள் (தம்மேற்படாதபடி தந்திரமாக அவற்றிற்கு) விலகப் பெற்ற: வேங்கடமே -,- மோடு மதம் தந்திக்கு - உயர்ச்சியையுடைய மத யானைக்கு, அமலத்தார்தாம் பெறூஉம் வீடு அளித்தார் - நிர்மலரான ஞானிகள் பெறுதற்கு உரிய முத்தியைக் கொடுத்தருளியவரும், உந்தி கமலத்தார் - திருநாபித்தாமரையையுடையவருமான திருமாலினது, ஊர் - திருப்பதி. கூட்டு - பிறவினை வினைத்தொகை. வேட்டுவர் - வேடுஎன்னுந் தொழிலையுடையார்; வேடு - மிருகபக்ஷிகளைப் பிடித்துவருத்துதல். வேட்டுவரம்பு ஒழியும் - வேடர்களுடைய அம்புகள் பட்டதனால் அழியப்பெற்ற எனினுமாம். தந்தீ என்ற வடசொல் - தந்தத்தை யுடைய தென்று காரணப் |