கடமே -,- கோலம் சேர் மாரில் அலங்கு ஆரத்தார் - அழகு பொருந்திய திருமார்பில் அசைகின்ற ஆரங்களை யுடையவரும், மற்றும் பல் பூண் அணிந்த - (அவ்வாரம் மாத்திரமே யன்றி) மற்றும் பல ஆபரணங்களைத் தரித்த, காரில் அலங்காரத்தார் - காளமேகம் போன்ற அழகுடையவரு மான திருமால், காப்பு - (உயிர்களைப்) பாதுகாக்கு மிடம்; (எ - று.) சேலஞ்சுங்கண் - பிறழ்ச்சியிலும் அழகிலும் சேலைவென்றகண். மடவார் - மடமையை யுடையவர்; மடமை - இளமை, அல்லது மகளிர்க்கு உரியதான பேதைமைக்குணம். அஞ்சு வர்க்கம் - முடி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள் என்னும் மயிர் முடியின் வகைகள்: மயிரை உச்சியில் முடித்தல், முடி. சுருட்டி முடித்தல், குழல், மயிரை முடிந்துவிடுதல், கொண்டை. பின்னி விடுதல், பனிச்சை, பின்னே செருகல், சுருள், வர்க்கம், ஸ்வர்க்கம், ஹாரம், அலங்காரம் - வடசொற்கள். அலங்கு ஆரம் - வினைத்தொகை. ஆரம் - பொன் மணி மலர்களா லாகிய மாலை. திருமாலின் திருமேனிக்குக் காளமேகம் நிறத்தில் உவமம். (94) 95. | கொய்யு மலர்ச்சோலைக் கொக்கும் பிணியாளர் | | மெய்யும் வடுத்தவிரும் வேங்கடமே - நையுஞ் | | சனனாந் தகனார் தலையிலிதோள் சாய்த்த | | சினனாந் தகனார் சிலம்பு. | (இ - ள்.) கொய்யும் மலர் சோலை கொக்கும் - பறித்தற்கு உரிய மலர்களையுடைய சோலையிலுள்ள மாமரமும், வடுத்து அவிரும் - பிஞ்சுவிட்டு விளங்கப்பெற்ற: பிணியாளர் மெய்யும் - நோயாளிகளுடைய உடம்பும், வடு தவிரும் - (அங்கு வந்தமாத்திரத்தால்) உடற்குற்றமாகிய அந்நோய் நீங்கப் பெற்ற: வேங்கடமே -,- நையும் சனன அந்தகனார் - (உயிர்கள்) வருந்துதற்குக் காரணமான பிறப்பை (அடியார்க்கு) ஒழிப்பவரும், தலை இலி தோள் சாய்த்த - கபந்தனுடைய தோள்களை வெட்டித்தள்ளின, சினன் - கோபத்தையுடைய, நாந்தகனார் - நந்தகமென்னும் வாட்படையையுடையவருமான திருமாலினது, சிலம்பு - திருமலை; (எ - று.) மாமரத்தை "கொக்கு" என்பது - துளுவநாட்டார் வழங்குங் திசைச் சொல். வடுத்தல் - இளங்காய் அரும்பல். நையும்என்ற பெயரெச்சம் - காரியப் பொருளது. ஜநநாந்தகன் - பிறப்புக்கு யமனாகவுள்ளவன்; பிறப்பையொழித்து முத்தி யருள்பவ னென்றபடி; தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர். தலையிலி - தலையில்லாதவன்; தலை வெளித்தெரியாது வயிற்றினுள் அடங்கியமைபற்றி, கவந்தன் தலையிலி யெனப்பட்டான். சினன் - சினம் என்பதன் இறுதிப்போலி. நந்தகமென்ற வடசொல், நாந்தகமென விகாரப்பட்டது. பிணியாளர் மெய் வடுத்தவிர்தல் - "பித்து மல டூமை முடம் பேய் குருடு கூன் செவிடு, மெய்த்துயர் நோய் தீர்த்தருளும் வேங்கடமே" என முன்னர்க் கூறப்பட்டது. (95) |