செய்தருள்" என்றதனால், இது மநஸ்தாபந்தீர்கிறநிலையில் நிகழ்ந்த பேச்சென்க. இங்குக் குறிப்பாகக்காட்டிய ஸ்வாபதேசார்த்தங்களின் விவரணம், ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயம்வல்லார்வாய்க் கேட்டு உணரத்தக்கது. (97) 98. | அரும்பாதகன்பொய்யன்காமுகன்கள்வனருள்சிறிதும் | | அரும்பாதகன்னெஞ்சனாறாச்சினத்தனவாவினின்றுந் | | திரும்பாதகன்மத்தனானேற்குச்சேடச்சிலம்பமர்ந்த | | திரும்பாதகஞ்சந்தரிலதுகாணுன்றிருவருளே. | (இ - ள்.) அரும் பாதகன் - (போக்குதற்கு) அரிய பாவங்களையுடையவனும், பொய்யன் - பொய்பேசுபவனும், காமுகன் - சிற்றின்பவிருப்பமுடையவனும், கள்வன் - களவுசெய்பவனும், அருள் சிறிதும் அரும்பாத கல் நெஞ்சன் - கருணையென்பதுசிறிதேனுந்தோன்றப்பெறாத கல்லைப்போன்ற கடின சித்தமுடையவனும், ஆறா சினத்தன் - தணியாக்கோபமுள்ளவனும், அவாவினின்றும் திரும்பாத கன்மத்தன் - ஆசையினின்று மீளாத கருமத்தை யுடையவனும், ஆனேற்கு - ஆகிய எனக்கு, சேடன் சிலம்பு அமர்ந்து அதிரும் பாத கஞ்சம் தரில் - திருவேங்கடமலையி லெழுந்தருளிப் பாததண்டைகள்) ஒலிக்கப்பெற்ற (நினது) திருவடித்தாமரைமலர்களைக் கொடுத்தால், அதுகாண் உன் திரு அருள் - அதுவன்றோ உனது மேலானகருணையாம்; (எ - று.) - காண் - தேற்றம். தீக்குணந் தீச்செயல்கட்கெல்லாங் கொள்கலமான என்னை உன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ளுதலே நினதுதிருவருட்குச் சிறப்பு என்பதாம். "அரும்பாதகன்" என்றது முதலாகத் தமதுதாழ்வை எடுத்துரைத்தார். எம்பெருமானுக்கு இயல்பில் அடிமையாகவுள்ள தமதுஆத்மாவை அங்ஙனம் எண்ணாது ஸ்வதந்திரமென்று எண்ணுதல் அவனுக்கு உரியபொரு ளைக் களவுசெய்த தாகுதலால், அங்ஙனம் அகங்காரமுடையே னென்பார், தம்மை "கள்வன்" என்றார்; "பண்டேயுன்தொண்டாம் பழவுயிரை யென்ன தென்று, கொண்டேனைக் கள்வனென்று" என்னும் நூற்றெட்டுத்திருப் பதியந்தாதியையும் காண்க. "அவாவென்ப வெல்லாவுயிர்க்குமெஞ்ஞான்றுந், தவா அப்பிறப்பீனும்வித்து" என்றபடி அவா கர்மத்துக்கு மூலகாரணமாதலால், 'அவாவினின்றுந் திரும்பாத கன்மம்' எனப்பட்டது. சிலம்பு - மலை. அணியப்பட்ட ஆபரணத்தின் அதிர்ச்சியை அணியும்உறுப்பான திருவடியின் மே லேற்றிச் சொன்னது, இடத்துநிகழ்பொருளின்தொழிலை இடத்தின் மேற் சார்த்திக்கூறிய உபசாரவழக்கு. காமுகன் - காமமுடையவன். சேஷன் என்ற பெயர் - (பிரளயகாலத்திலும் அழியாது) சேஷித்திருப்பவனென்று காரணப்பொருள்படும்; சேஷித்தல் - மிச்சப்படுதல். ஈற்றடியில், 'திருப்பாதகஞ்சம்' என்பது மெலித்தல் விகாரம் பெற்றுவந்த தெனக்கொண்டு, சேஷகிரியில் நின்ற திருவடித்தாம ரைமலர்கள் என்று உரைகொள்ளுதலும் உண்டு. (98) |