பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி609

99.திருமந்திரமில்லை சங்காழியில்லை திருமணில்லை
தருமந்திரமொன்றுஞ்செய்தறியீர் செம்பொற்றானவனை
மருமந்திரங்கப்பிளந்தான்வடமலைவாரஞ்செல்லீர்
கருமந்திரண்டதையெத்தாற்களையக்கருதுதிரே.

(இ - ள்.) (பேதைச்சனங்களே! உங்கள்பக்கல்), திரு மந்திரம் இல்லை - பெரியதிருமந்திரமெனப்படுகிற திருவஷ்டாக்ஷரமகாமந்திரம் இல்லை; சங்கு ஆழி இல்லை - சங்கசக்கரமுத்திரை இல்லை; திருமண் இல்லை - திரு மண்காப்பும் இல்லை; தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் - (எம்பெருமானைச்சரணமடைதலாகியசரணாகதி) தருமத்தை நிலையாகச்சிறிதும் செய்து பயின்றீரில்லை; செம் பொன் தானவனை - சிவந்த பொன்னின்நிறமுள்ள இரணியாசுரனை, மருமம் திரங்க - மார்பு வருந்த, பிளந்தான் - (நரசிங்க மூர்த்தியாய்ப்) பிளந்திட்டவனான எம்பெருமானுடைய, வட மலை வாரம் - திருவேங்கடமலையின் அடிவாரத்திலேனும், செல்லீர் - சென்றீரில்லை; (இத்தன்மையரானநீங்கள்), கருமம் திரண்டதை எத்தால் களைய கருதுதிர் - (உங்கள்) ஊழ்வினை தொகுதிப்பட்டுள்ளதை எவ்வாற்றால் நீக்க நினைக்கிறீர்கள்?

இங்ஙனம் இரங்கிக் கூறியதனால், இனியேனும் நீங்கள் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாய் உஜ்ஜீவநோபாயமாகிற திருமந்த்ரோபதேசத்தையும், தப்தசங்க சக்ரமுத்திரை தரிக்கப்பெறுதலாகிய திருவிலச்சினையையும், கேசவாதி துவாதசநாமங்களை முறையேசொல்லிஉடம்பிற்பன்னிரண்டிடத்தில் திருமணிடுதலாகிய ஊர்த்வபுண்டரத்தையும் நல்ல ஆசிரியரது அருளாற் பெற்று, பிரபத்திமார்க்கத்தி லிழிந்து, துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலந சீலனான எம்பெருமானுடைய திவ்வியதேசத்தைச் சார்ந்து, ஊழ்வினையொழித்து வாழ்வீர்க ளென்று அவைஷ்ணவர்கட்குக் குறிப்பித்தபடியாம். சங்காழி, திருமண், திருமந்திரம் என்பது முறையாயினும், தலைமைபற்றித் திருமந்திரத்தை முதலில் வைத்து, மந்திரோபதேசத்திற்கு அங்கமாகின்ற தாபத்தையும் புண்டரத்தையும் அதன்பின் நிறுத்தினார். பஞ்சஸம்ஸ்காரங்களில் தாபம் புண்டரம் மந்திரம் என்ற மூன்றைக் கூறினது, நாமம் யாகம் என்ற மற்றையிரண்டற்கும் உபலக்ஷணம்; (நாமம் - அடிமைப்பெயரிடப்பெறுதல். யாகம் - திருவாராதநக்கிகரமம் அருளப்பெறுதல்.) "எல்லாத்தருமங்களையும் பற்றறவிட்டு என்னையொருவனைச் சரணமாக அடை, நான் உன்னை எல்லாத்தீவினைகளினின்றும் விடுவிப்பேன், வருந்தாதே" என்றது ஸ்ரீகீதையிற் கண்ணன் அருளிய முடிவுரையாதல்கொண்டு, தருமம்என்பதற்கு - சரணாகதியென்று உரைக்கப்பட்டது. செம்பொற்றானவன் - செம்பொன்னின் பெயரையுடைய அசுர னெனினுமாம்; பொன் என்ற தென்மொழியும், ஹிரண்யம்என்ற வடமொழியும் பரியாயநாமமாதல் காண்க. பிறப்பு அநாதி யாய்வருதலின் உயிரால் அளவின்றியீட்டப்பட்ட வினைகளின் பயன்கள் மலைபோலப் பெருந்தொகுதியாகக் குவிந்துள்ளதனால், "கருமந் திரண்டது' என்றார்.