பக்கம் எண் :


770திருத்தொண்டர் புராணம்

 

பெரியபெருமாளுக்குக் குடத்த தாரநிலை விளக்கு ஒன்று இருப்பு நாராசம் உட்பட நிறை நூற்றிருபதின் பலம் வெண்கல மடல் ஒன்று நிறை நாற்பலம்"1

மேலும் இராசராசேச்சுரர் ஆலயத்தில் திருப்பதிகம் (திருப்பதியம்) பாடுவதற்கு 48 பேருக்கு ஏற்பாடுகள் செய்த ஒரு திருப்பணியைக் (Vol. II N. 65) கல்வெட்டில் காண்கிறோம். ஆகவே இராசராசர் காலத்தில் திருமுறைகள் சேகரிக்கப்பட்டு (நம்பியாண்டார் நம்பிகளால்) கோயில்களில் அவை வழங்கப் பெற்றுவந்தன என அறிகிறோம். அப்பதிகங்களில் அப்பர் பதிகங்களும் உண்டு என அறியவேண்டும். அது "இராசகேசரி வர்மரான இராசராச தேவர்க்குயாண்டு இருபத்தொன்பதாவது வரை உடையார் ஸ்ரீ ராஜராஜேசுவரர் உடையார்க்கு திருப்பதியம் விண்ணப்பம் செய்ய உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண்மரும் இவர்களிலே நிலையாக உடுக்கை வாசிப்பான் ஒருவனும்......" என அக்கல்வெட்டுக் கூறுகிறது. இக்கல்வெட்டுக்கள் இராசராசன் I, இராஜேந்திரன் காலத்தன. இவை இவர்கள் காலத்தில் அப்பருடைய பெருமை எதுகாறும் விளங்கியிருந்தது என்பதைக் காட்டும்.

தலங்களிற் கண்டவை

இனி, அப்பர் சுவாமிகளுடைய வாழ்நாளிலே அவருடைய திருவடி பட்டுச் சிறந்து விளங்குகின்ற புனிதத்தலங்களில் எத்தலங்களில் அவரைப் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன என எடுத்துக் கூறுவோம்.

அவர் திருவவதாரம் செய்த தலமாகிய திருமுனைப்பாடி நாட்டுத் திருவாமூரில் பசு பதீசுவரர்கோயிலில் மேற்குச் சுவரிலும் தெற்குச் சுவரிலுமுள்ள இராசகேசரி வர்மன் குலோத்துங்க சோழன் 31-வது ஆண்டு கல்வெட்டு (137 - 1933 - 34) ஒன்றில் இரவீசுரமுடையார் கோயிலில் தாபித்திருக்கும் திருநாவுக்கரைய தேவர்க்கு படித்தரத்திற்கும் நுந்தாவிளக்குக்குமாக ஒரு வேலி நிலத்தைக் கங்கைகொண்ட சோழ வளநாட்டுத் திருமுனைப்பாடி நாட்டுக் கீழாமூர் நாட்டுத் திருவாமூர் ஊரார் விற்று அத்திருப்பணிகளுக்கு வேண்டிய நெல் முதலியவைகளைத் தருவதாக ஒப்புக் கொண்ட அவ்வாலயத்து இரு சிவப்பிராமணர்கள் வசம் அந்நிலத்தை விட்டதாகக் கண்டிருக்கிறது. இக்கல்வெட்டு "புகழ்மாது" என்ற தொடக்கத்து மெய்க்கீர்த்தியுடையதாகையால் இது குலோத்துங்கன் காலத்தது என்றும், தானம்விட்ட ஆண்டு கி. பி. 1101 எனவும் அறியலாம்.

மேலும் திருவாமூருக்கு அருகில் இரண்டு பர்லாங்கு தூரத்திலுள்ள ஒரு இலுப்பைத் தோப்பில் உள்ள ஒரு பலகைக் கல்வெட்டில் (139/1933 - 34) முத்துரெட்டியார் என்பவர் சிறு மாமரங்கள் கொண்ட 3 காணித் தோப்பு ஒன்றை அவ்வாலயத்துச் சுவாமிக்கும் அப்பர் சுவாமிகளுக்குமாக விளக்குகள் வைப்பதற்காக விட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. அதன் எழுத்துத் தற்கால எழுத்து.

தமது தமக்கையாரால் சைவ சமயத்திற்கு மீட்கப் பெற்றுச் சூலை நோய் நீங்கத்திருவருள் பெற்ற புனிதத் தலமாகிய திருவதிகை வீரட்டானத்தில் அப்பருக்குத் தனி ஆலயம் இருக்கிறது. அதில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றுள் "புகழ்மாது விளங்க"என்ற தொடக்கத்துக் குலோத்துங்கன் காலத்துக்கல்வெட்டும் இருப்பதால் அவ்வாலயம் அக்காலத்திற்கு முந்தியே ஏற்பட்டிருக்க வேண்டும். மேலும் அவ்வரசன் 44 ஆண்டில் வாகீசர் மடத்திற்கு நிலதானம் செய்ததாகக் (49/1903) கல்வெட்டுக் கூறுகிறது. அதே அரசனது 48 ஆண்டில்

 1.

இக்கல்வெட்டில் பெரிய பெருமாள் என்றது இராசராசனையே குறிக்கின்றது. உரோமானிய சக்கரவர்த்திகளைப் போலவே சோழ மன்னர்களும் தங்கள் பிரதி பிம்பங்களை ஆலயங்களில் வைத்துப் பூஜை செய்ய ஏற்பாடு செய்தனராம்.