(382/1925) ‘புகழ்மாது விளங்க' என்னும் தொடக்கத்துக் கல்வெட்டில் (கி. பி. 1118) அரும்பாக்கத்து பொன்னம்பலக்கூத்தனது 4800 குழி புன் செய் நிலத்தை நன்செய் ஆக்கி அதிராச மாங்கலிய புரத்துக் குடிகள் திருவதிகை ஆலயத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர்தேவர் மடத்தில் அன்னதானம் செய்வதற்காகத் தந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு கல்வெட்டில் (403/21) திருவீரட்டானருக்குச் சேர்ந்த நிலத்தில் பிடாரிகோயிலுக்கு வடக்கில் இருந்த காட்டை அழித்துத் திருநாவுக்கரசன் திருவீதி என்ற பெயரிட்டு அதில் கைக்கோளர், வாணியர், அங்காடியர் முதலியவர்களைக் குடியேற்றி அவர்கள் செலுத்தவேண்டிய வரியை நிர்ணயித்ததாகத் தெரிகிறது. இக் கல்வெட்டின் எழுத்து பிற்காலத்தது. மற்றும் திரிபுர சங்கார மூர்த்தியின் எதிரில் உள்ள இரு தூண்களில் காலிங்கன், நரலோக வீரன், கருணாகரத் தொண்டைமான் முதலிய பெயர்களைக் கொண்ட ஒரு போர்த் தலைவன் ஆலயத்திற்குச் செய்த திருப்பணிகள் 25 வெண்பாக்களில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. (369/1921) அவற்றில் 22-வது வெண்பா, "ஈசன் அதிகையில்வா கீசன் எழுந்தருள மாசில் பெருங்கோயில் வந்தமைதான் - பூசல் விளைவித்த வேணாடும் வெற்பனைத்தும் செந்தீ வளைவித்தான் தொண்டையர் மன்." அப்பருடைய கோயிலைக் கருணாகரத் தொண்டைமான் கட்டினதாகத் கூறுகிறது. இவனே கலிங்கத்தை வென்ற தளபதி போலும். ஆகவே குலோத்துங்கன் (1070 - 1148) காலம் எனலாம். (கலிங்கத்துப்பரணி காண்க.) திருவாரூர்த் தியாகராயர் சந்நிதியில் உள்ள ஒரு கல்வெட்டில் (73/90) அநபாயன் (குலோத்துங்கன் II) 7-ம் ஆண்டில் மூவர்களுடைய உருவங்களையும் தாபித்து அவைகளுக்குத் தானம் செய்ததாகக்கண்டிருக்கிறது. அப்பருடைய பெயரை வடமொழியில் வாக்கதிபதி என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இவ்வரசரே சேக்கிழார் பெருமானைத் திருத்தொண்டர் புராணம் பாடச் சொன்னவர். அப்பர்சுவாமிகள் இறைவரது திருவடிப்பேறு எய்திய தலமாகிய திருப்புகலூரில் அப்பருடைய திருக்கோயில் ஒன்று சுற்றுப்பிரகாரத்தில் இருக்கிறது. இம்மூர்த்திக்கு முதல் இராசராசன் (985 - 1052) காலத்திலே நித்திய பூசைக்கு நிபந்தம் ஏற்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது. மற்றொரு கல்வெட்டில் "குளிச் செழுந்த நாயனார்" என்ற குறிப்புக் காணப்படுகிறது. இந்நாயனார் திருநாவுக்கரசராக இருக்கவேண்டும். கயிலையில் ஒரு தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றில் ஒரு திருக்குளத்தில் இந்நாயனார் எழுந்த ஒரு அற்புதத்தை இக்கல்வெட்டு இவ்வாறு குறிக்கிறது. மேலும் இத்தலத்தில் அவதரித்த முருக நாயனார் அப்பர் காலத்திலேயே புட்பத் திருத்தொண்டு செய்து முத்தி பெற்றவர். இவர் பேரால் "நம்பி முருகன் திருமடம்" என்ற ஒரு மடம் இருந்ததாக ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இன்னும் அக்காலத்திலே இருந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரைத் "தருமபுரத்து நாயனார்", "யாழ்மூரி நாயனார்" எனவும், திருநீலநக்க நாயனாரை "நக்க நாயனா" ரெனவும் இத்தலத்துக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இவ்வூர் ஆலயத்தில் அப்பர் சுவாமிகளுக்குச் சித்திரைச் சதயத்தை ஒட்டிப் பத்து நாட்களும், வைகாசி மாதத்திலும், திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இவ்விரண்டு திருவிழாக்களும் இம்மாதங்களில் நடைபெற்றதை ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது. மற்றொரு |