நன் - என்றதனால் இப்போது அச்சிறை விட்ட என்பதும் பெறப்பட்டன. புனல் - புனல்போல. இன் என்ற உவமப் பொருளில் வருமுருபு தொக்கது. புனல் கடல் எய்துவதுபோல. நாவலூராளி கழல் எய்தும் என்று முடிக்க. எய்தும் என்ற பொருள் வினை புனல் எய்துவதுபோல என உவமையினும் சென்றியைந்தது. சிறை - கரை. கழல் எய்தும் என்றவாற்றால் கடல் என்றது உவமையில் வருவித்துக் கொள்க. கழல் - கால்; அதிற் கட்டப்படுதலாகிய காரணம்பற்றி மணி வடத்துக்கும் பெயராயிற்று. "இடுகுறிக் காரணப் பெயர்" என்ற சூத்திரம் பார்க்க. நன்கழல் - சிவசத்திக்குக் கேடில்லாமையின், அதனிற் றலைப்பட்டவுயிர் மீண்டும் பிறவியில் மீளுதலில்லையாதன் நன்கழல் என்றார். "உலரவிலன் பாதம்" (சிவஞானபோதம் 8 - 4 வெண்பா). கழல் - மலவரற்றல் தவிர்க்கும் வெற்றிப்பாடு குறித்து நின்றது. "கள்ளவினை, வென்றுபிறப் பறுக்கச் சாத்திய வீரக்கழலும்" (போற்றி பஃறொடை). சிறை நன்புனலின் திருநாவலூராளி கழல் எய்தும் - "வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்" (நம்பி - திருவஞ்சைக்களம் - 8) என்று, "பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்தும் சேய நன்னெறி குறுகிட" (வெள் - சருக் - 28), முத்தி விண்ணப்பம் செய்து, ஆளுடையநம்பிகள் இவ்வுலகப் பிறவியை விட்டுக் கயிலைக் கிறைகழலாகிய மீளா நெறியடைந்த வரலாறும், "சிறை செய்ய நின்ற செழும்புனலினுள்ளஞ், சிறைசெய் புலனுணர்விற் றீரந்து, சிறைவிட், டலைகடலிற் சென்றடங்கு மாறுபோல் மீளா, துலைவிலான் பாதத்தையுற்று" என்ற சிவஞானபோதம் 8-ஆம் சூத்-4-ஆம் அதி - உதாரணவெண்பாவின் கருத்தும் முற்றும் பொருந்துதல் காண்க. சிறை நன்புனல் திருநாவலூர் - என்று கூட்டியும், மேற்சொல்லியவாறன்றிச் "சிறைவான் புனற்றில்லை" (திருக்கோவை) என்புழிப்போலப் புனல் என்பதனை ஊர்க்கு அடைமொழியாக்கியும், புனலையுடைய திருநாவலூர் என்றுரைப்பினுமமையும், "ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்" (தேவா) என்றபடி அணையிற்றேக்கிய நீர்ச்செழிப்பு ஊருக்கு வளம் செய்வதாம். இவன் அருள் போற்ற - முடியன் அடி அடைவேன் - இவன் - கழல் நாளையெய்தும் இவன் - ஆளுடைய நம்பிகள். அணிமைச்சுட்டு. குறும்பனாருக்கு நம்பிகள் எப்போதும் "கையாற் றொழுது வாய் வாழ்த்தி மனத்தா னினைக்கும்" கடப்பாடு பற்றி அணியராய் நின்றமை யுணர்த்திற்று. நம்பிகளது அருளினைப் போற்றுதற்கென்றே குறும்பனார் நாதனடி யடைவேன் என்று துணிந்தார். இதனைப் "பரவை கேள்வன் பாதமுறக் கயிலைப் பொருப்ப ரடியடைந்தமிழலைக் குறும்பர்" (1716) என்று விரித்தமை காண்க. போற்ற - போற்றும் பொருட்டு. உடல் பிரிந்தான் - நிட்டையிருந்தபடியே கபாலமூலம் திறப்ப அதன் வழியே உயிரைச் சிவனடியிற் சேர்த்தினார். நாவ லூராளி கழல் நாளை எய்தும்; இன்றே இவனருள் போற்றச் சிவன் அடி அடைவேன் என்று உடல் பிரிந்த செய்திகளை விரிநூல் 1713 - 1714 - 1715 - 1716 பாட்டுக்களில் விரித்தது. ஊரும் மரபும் பெயரும் தொகை நூல் உணர்த்திற்று. குருவருள் பெறச் சிவனடி சேர்ந்த வரலாற்றை வகை நூல் வகுத்தது. செய்த திருத்தொண்டும் பிறவும் விரிநூல் விரித்தபடி மேற்கண்டுகொள்க. 1706. (இ-ள்.) மிழலைநாட்டுப் பெருமிழலை - மிழலை நாட்டிற் பெருமிழலை என்ற ஊர்; குதம்...சூழ்புடைத்தாய் - மாவும், நெருங்கு குலைகளையுடை தென்னைகளும், பலாவும், கமுகுகளும் சூழும் சுற்றுப்புறப் பணைகளையுடையதாகி; வீதி...மேவி - வீதிகள்தோறும் திருநீற்றின் ஒளிபெருகப் பொருந்தி; விளக்கும்பதி - |