பக்கம் எண் :

114ஆத்மாநாம் படைப்புகள்

இயக்கம் - ஒன்று

நகரத்தின் இயக்கத்தில்
சிதறிய மக்கள்
மூச்சுத் திணற ஓடுகின்றார்
மேலும் கீழும் ஏறி இறங்கி

எதிர்கொண்டு
மூச்சு முட்ட
ஒரு நிலை வருகையில்
காலம் கடந்த உணர்வில்
உருத் தெரியாமல் நசுங்கி
கோணல் முகங்களுடன்
தம்மையே காண வெட்கி
கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு

உடும்புப் பிடியில் சிதைந்த
கடவுளை
இழுத்துத் தெருவில் வருகின்றார்

உன் பெயர் உன் உருவம் உன் ஆட்சி
நாங்கள் அடிமைகள் என

மரங்கள்
பூக்கள் குலுங்க
நகைக்கின்றன
காற்றின் அரவணைப்பில்