பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்117

தடை

தடை
அதன் தன்னம்பிக்கையோடு
பிரகடனப்படுத்தப்படுகிறது
யாரும் கூட்டமாய் நிற்கக் கூடாது
கூட்டங்கள் கூடாது
சமய பிண ஊர்வலங்கள் தவிர
வேறு ஊர்வலங்கள் செல்லக் கூடாது
ஆட்டோவில் ஒலிபெருக்கி அலறப்
பொதுமக்கள் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தனர்
சாமானியன் எதையுமே மதிப்பதில்லை
அதைப் போலவே இதையும்
இந்த நாட்டில்
நால்வர் கூடிப் பேசும்போது
வரும் விஷயங்கள்
உலகறிந்ததாயிற்றே
ஏனிந்தக் கலவரம்
என்னுடைய கோரிக்கை
தடைக்கு
மதிப்பு வேண்டும்
சும்மா வெறுமனே
ஆகாயச் சிந்தனை
புரிபவனிடம்
எதற்குத் தடை
பஸ்ஸு க்குத் தீ
கலவரம்
தடியடி
கண்ணீர்ப்புகை
துப்பாக்கிச் சூடு
வந்தாலொழிய
நாம் அதைத் தீண்ட வேண்டியதில்லை
மதிப்போம் தடையை
மரியாதையாய் நடப்போம்
போகிறபோக்கில்
காதில் விழுந்தது
வேலைநீக்கம் செய்யப்பட்ட
பன்னிருவர்
சாகும்வரை உண்ணாவிரதம்