செடியுடன் ஒரு உரையாடல் ஒரு செடி என்னைப் பார்த்துச் சிரித்தது நானும் புதிய அறிமுகத்தை மகிழ்ந்தேன் நீ யார் என்று அது என்னைக் கேட்டது நான்... நான், , , எதுவும் சொல்லத் தெரியவில்லை பெருமூச்சொன்றை வெளியிட்டேன் ஏன் இப்படி லோல் படுகிறாய் என்னைப் போல் அமைதியாய் இரேன் காற்று என்னை அரவணைக்கிறது நானும் ஆடி அசைந்து சந்துஷ்டிக்கிறேன் இருந்த இடத்திலேயே சொர்க்கம் உள்ளது காற்று மென்மையானது குளிர்ச்சியை உடலெங்கும் நிறைக்கிறது காற்று வந்துகொண்டேயிருக்கிறது நிற்பாடும் புறப்பாடும் அதற்கில்லை என்னைக் காதலிக்கும் காற்று இவ்வுலகம் முழுதையும் காதலிக்கிறது எனது இலைகள் காற்றின் வருகையால் மகிழ்ச்சி நாட்டியம் நிகழ்த்துகின்றன அம்மா - காற்று நம்மை ஏன் காதலிக்கிறது என என்றுமே இலைகள் கேட்பதில்லை மழையும் அப்படித்தான் காலம் காலமாய் என்னை ஊட்டி வளர்க்கிறது பனிக்காலத்தில் தூறும் மழை கிளுகிளுப்பூட்டுகிறது |