பக்கம் எண் :

124ஆத்மாநாம் படைப்புகள்

நான்தான் வீரகேஸரி

நான்தான் வீரகேஸரி
உறையிலேயே உறங்கும்
என் வாளைச் சுழற்றி
உங்கள்
ஒட்டிய உலர்ந்த
வயிற்றில் ஒரு கீறல்
ஸ்ட்ரா ஒன்றை வைத்து
ரத்தத்தை உறிஞ்சுகிறேன்
கூர் நகக் கைகளால்
வயிற்றைப் பிளந்து
குடலை உருவி
எச்சில் இலைகளுக்கு
அலையும் நாய்களுக்குப்
போடுகிறேன்
ஆடு சதைகளுக்கு ஏராளமான போட்டி
பருந்துகளிடமிருந்து
மீதமிருக்கும் உடலின் பகுதிகளையெல்லாம்
ப்ளேடால் கீறுகிறேன்
எட்டி உதைத்துக்
கொசுக்கள் நிறைந்த சாக்கடையில்
தள்ளுகிறேன்
அசையும் பகுதிகள் மீதெல்லாம்
இரட்டைக் குழல் துப்பாக்கி கொண்டு
சுட்டுக்கொண்டேயிருக்கிறேன்
நீங்கள் பார்த்துக்கொண்டேயிருக்கிறீர்கள்