பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்125

இரண்டு கவிதைகள்

நூலக மேசைக்கருகில்
ஒருவர் புத்தகம்
படித்துக்கொண்டிருக்கிறார்
அவர் படிப்பது வேறு புத்தகம்
நீங்கள் படிப்பது வேறு புத்தகம்
ஒரு நாள்
நீங்கள் இருவருமே
ஏன் எல்லோருமே
ஒரே ஒரு புத்தகத்தைத்தான் படிக்கப்
போகிறீர்கள்
அது உங்கள் புத்தகம்தான்

    தாள்கள் படபடக்க
    எழுத்துக்கள் வார்த்தைகளாகி
    வார்த்தைகள் வாக்கியங்களாகிப்
    பொருள் கிடைத்தது
    பொருள் கிடைத்தவுடன்
    உலகம் நாசமாகி
    புதியதாய்த் தெரிந்தது ஒரு உலகம்
    பொருள் கிடைத்ததோ ஒருகணம்தான்
    அந்தக் கணமும் கைநழுவிப் போகப்
    பார்த்த பழைய உலகத்தையே
    மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
    தாள்கள் படபடக்க